×
Saravana Stores

?விடியற்காலை காணும் கனவு பலிக்கும் என்கிறார்களே, இது உண்மையா?

– மு. மனோகரன், ராமநாதபுரம்.
உண்மைதான். ஆனால், அதற்கும் ஒரு சில விதிமுறைகள் உண்டு. இரவு உறங்கச் சென்ற பிறகு நடுவில் எழுந்திருக்காமல் அதாவது இடையில் விழிப்பு வராமல் தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மட்டுமே விடியற்காலையில் காணும் கனவு என்பது பலிக்கும். இடையில் ஒருமுறை எழுந்து இயற்கை உபாதைகளை கழித்துவிட்டு மீண்டும் உறங்கச் செல்லும்போது இந்த விதிகள் பொருந்தாது.

?பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக்கூடாது என்று கூறுவது எதனால்?

– வண்ணை கணேசன், சென்னை.
இதுபோன்ற கருத்துக்கள் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. அந்த நாளில் மாடிவீடு என்பதே அபூர்வம். எல்லோரும் வெட்ட வெளியில்தான் படுத்து உறங்கினார்கள். மழை வந்தால் சத்திரம் மற்றும் சாவடிகளில் தங்கினார்கள். மற்ற நாட்களில் குடும்பத்தினர் அனைவருமே வெட்ட வெளியில்தானே படுத்து உறங்கினார்கள். இந்நிலையில், பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக் கூடாது என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் எப்படி சொல்லியிருப்பார்கள்? இதுபோன்ற கருத்துக்கள் முற்றிலும் மூடநம்பிக்கையே ஆகும்.

?மனையடி சாஸ்திரம் என்றால் என்ன?

– மருதுபாண்டி, புதுச்சேரி.
மனையின் நீள அகல அளவுகள் தரும் பலன்களைப் பற்றி அறிவதே மனையடி சாஸ்திரம் ஆகும். ஆலயங்களை அமைப்பதற்கான சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் தோன்றிய இந்த கலை, நாளடைவில் வீடு கட்டுவதற்கு உரிய அளவுகளைச் சொல்லும் வகையில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தினசரி காலண்டர் அட்டையின் பின்புறம் மனையடி சாஸ்திரத்தின் படி அளவுகளையும், அதற்கான பலன்களையும் அச்சிட்டிருப்பார்கள். இது பொதுவான பலன் ஆகும். மனை அமைந்திருக்கும் திசை மற்றும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றவாறு வீடு கட்டும்போது மனை மற்றும் அறைகளின் அளவுகளை அமைத்துக் கொள்வது நல்லது.

?மாடிக்குச் செல்ல மாடிப்படிகள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டுமா?

– கிருஷ்ணபிரசாத், சென்னை.
மாடியில் உள்ள பகுதியை நாம்தான் உபயோகப்படுத்துகிறோம் என்றால் வீட்டிற்குள்ளேயே இருக்கலாம். மாறாக மாடியில் மற்றொரு போர்ஷன் கட்டி அதனை வாடகைக்கு விடும் பட்சத்தில் வீட்டிற்கு வெளியே இருப்பதுதான் நல்லது. நம் வீட்டாரைத் தவிர மற்றவர்கள் மாடிப்பகுதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் படிகள் என்பது வெளியில்தான் இருக்கவேண்டும். நம்மைத்தவிர வேறு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை எனும் பட்சத்தில் வீட்டிற்குள்ளேயே படிகளை அமைக்கலாம்.

?பங்காளிகள் தீட்டு ஏற்படுகையில் குலதெய்வ, இஷ்டதெய்வ ஆலய வழிபாடுகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இது பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆலய வழிபாட்டிற்கும் பங்காளி தீட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பங்காளிகளின் மூலமாக இறப்புத் தீட்டு ஏற்படும்போது, ஒரு வருடத்திற்கு நம் வீட்டில் பண்டிகைகள் என்பது மட்டும்தான் கிடையாது. கருமகாரியம் என்பது நடந்து முடிந்தவுடனேயே நம் வீட்டு பூஜை அறையில் தினசரி பூஜையைச் செய்ய துவங்கிவிடலாம். அதே போல, எல்லா ஆலயங்களுக்கும் செல்லலாம். இறந்தவரின் வயிற்றில் பிறந்த ஆண் பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் யாவரும் அனைத்து ஆலயங்களுக்கும் செல்லலாம். குலதெய்வத்தின் சந்நதியில் பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் இருக்கும் பட்சத்தில், பங்காளிகள் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றுபவர்கள் மட்டும் ஒரு வருட காலம் அதாவது தலைதிவசம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். மற்றவர்கள் தாராளமாக ஆலயத்திற்குச் செல்லலாம். இதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.

?வீட்டிற்கு முன்னோர்களின் பெயர்களை வைக்கலாமா? அல்லது எத்தகைய பெயரை வைக்க வேண்டும்?

– ஸ்ரீ ரஞ்சனி, திருச்சி.
பரம்பரையில் பிறக்கின்ற பிள்ளைகளுக்குத்தான் முன்னோர்களின் பெயர்களை வைக்க வேண்டும். மனிதர்களுக்கான பெயர்களை வீட்டிற்கு சூட்டுவதைவிட பிருந்தாவனம், ஆனந்த நிலையம், கோகுலம், குஹாலயம், ஸ்ரீ நிவாஸம் போன்ற பெயர்களை வைப்பது நல்லது.

?சாலை ஓரங்களில் வெட்ட வெளியில் உயரமான ஆஞ்சநேயர் சிலையை அமைக்கிறார்களே, இது சரியா?

– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
சரியே. அதுபோன்ற சிலைகள் கற்சிலைகள் அல்ல. சுதை என்றழைக்கப்படுகின்ற சிலைகள். மண் மற்றும் சிமெண்ட் கலவைகளால் அமைக்கப்படுவதால், சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் தோஷம் ஏதும் உண்டாகாது. அதுபோன்ற உயரமான சிலைகளுக்கு கீழே சிறிய கற்சிலையையும் அமைத்திருப்பார்கள். அந்த கற்சிலைக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த கற்சிலையை மூலஸ்தானம் ஆகவும் உயரமான சிலையை அதற்குரிய விமானமாகவும் பாவித்து வணங்கலாம்.

?இளமையிலேயே ஆன்மிகவாதி ஆவதற்கும், முதுமையில் ஆன்மிகவாதி ஆக மாறுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

– என்.ஜே.ராமன், நெல்லை.
ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் இடையே என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்கள். முதலாவது பிறவி ஞானம். முற்பிறவியின் பயனால் உண்டான ஞானம். இதுபோன்ற பிறவி ஞானத்தைப் பெற்றவர்கள் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார்கள். ஆதிசங்கரர், ஞானசம்பந்தர், விவேகானந்தர் போன்றவர்கள் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்கள். இளமையிலேயே இறைவனின் திருவடியைச் சென்றடைந்தவர்கள். இரண்டாவது, அனுபவ அறிவின் மூலமாக கிடைப்பது. இந்தப் பிறவியிலேயே தங்களது கர்மாவினை முழுமையாக தீர்த்துவிட வேண்டும், மறுபிறவி இல்லா நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆன்மிகத் தொண்டாற்றியவர்கள் திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றோரை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை ஆராய்வதைவிட அவர்கள் போதித்த ஆன்மிக கருத்துக்களை
பின்பற்றி நடப்பது மிகவும் நல்லது.

தொகுப்பு : திருக்கோவிலூர் KB ஹரிபிரசாத் வர்மா

The post ?விடியற்காலை காணும் கனவு பலிக்கும் என்கிறார்களே, இது உண்மையா? appeared first on Dinakaran.

Tags : M. Manokaran ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் முளைத்த பயிர்கள் தண்ணீரின்றி கருகும் பரிதாபம்