×
Saravana Stores

உக்கடம் மேம்பாலம் சுங்கம் பகுதி ஏறு தளம், இறங்கு தளம் பணி நிறைவு: வாகன போக்குவரத்துக்கு அனுமதி

கோவை: கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக 121 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக 195 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலம் கட்டும் பணி நடத்தப்பட்டது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு 152 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 481.95 கோடி ரூபாய் செலவில் இரு கட்ட மேம்பால பணிகளும் நடத்தப்பட்டது. கடந்த மாதம் 9ம் தேதி இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்திற்கு 47 மற்றும் 60 டெக்ஸ் லாப் அமைக்கப்பட்டது.

ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும் பொள்ளாச்சி ரோடு இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டது. சுங்கம் பகுதியில் உள்ள ஏறு இறங்கு தளம் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இங்ேக சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில், இங்கே ஏறு இறங்கு தளம் பயன்படுத்தாமல் தடுக்க அடைப்பு ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக பணிகள் வேகமாக நடந்த நிலையில் கடந்த வாரம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது. இந்த நிலையில் மேம்பாலத்தில் வாகன பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பரிட்சார்த்த அடிப்படையில் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கனகர வாகனங்கள் சென்று வந்த நிலையில் சுங்கம் பகுதி ஏறு, இறங்கு தளம் நேற்று முதல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

இந்த பாதையை அனைத்து ரக வாகனங்களும் பயன்படுத்தலாம் என மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் முழு அளவில் மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டது.
சுங்கம் வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோடு செல்ல முடியும். அதேபோல், பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் இருந்து வாகனங்கள் சுங்கம் பைபாஸ் ரோட்டிற்கு மேம்பாலம் வழியாக செல்ல முடியும். செல்வபுரம், ஒப்பணக்கார வீதி செல்வதற்கு மேம்பாலத்தை பயன்படுத்த முடியாது.

சுங்கம் பகுதி மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து போலீசார், பாலக்காடு ரோடு மேம்பாலம் துவங்கும் இடத்திலும், சுங்கம் பகுதி மேம்பாலம் துவங்கும் இடத்திலும் மேம்பாலத்தை தவிர்த்து கீழ் பாதையில் சென்று வர வேண்டும் என கடந்த மாதம் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். சுங்கம் மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை போலீசார் அகற்றவில்லை. இதனால் மேம்பாலத்தை நேற்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்தவில்லை.

இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியம் அறிவிப்பு அகற்றப்பட்டது. அதற்கு பின்னர் அதிகளவு வாகனங்கள் மேம்பாலம் வழியாக சுங்க பைபாஸ் ரோட்டில் இயக்கப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்டதால், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது. மேம்பால பணிகள் முழு அளவில் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post உக்கடம் மேம்பாலம் சுங்கம் பகுதி ஏறு தளம், இறங்கு தளம் பணி நிறைவு: வாகன போக்குவரத்துக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ukkadam ,Coimbatore ,Athupalam ,Dinakaran ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக...