×
Saravana Stores

விவசாயியின் செல்போனை ஹேக் செய்து ₹11 ஆயிரம் அபேஸ் சைபர் கிரைம் போலீசார் விசாரணை குடியாத்தம் காய்கறி சந்தையில் திருட்டுபோனது

குடியாத்தம், செப்.12: குடியாத்தத்தில் விவசாயியின் செல்போனை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், போனை ஹேக் செய்து ₹11 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த முதலியார் ஏரி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(50), விவசாயி. இவர் நேற்று காலை தென்குளக்கரை பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஜானகிராமனின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ₹70 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

சிறிது நேரத்தில் செல்போன் திருட்டுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், அவர் ஏற்கனவே பயன்படுத்தி வந்த சிம் கார்டை பிளாக் செய்துவிட்டு, அதே எண்ணை புதுப்பித்து வாங்கியுள்ளார். பின்னர், அந்த சிம் கார்டை வேறு செல்போனில் போட்டபோது, அவரது வங்கிக்கணக்கில் இருந்த ₹11 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் வந்துள்ளது. ஜானகிராமனின் செல்போனை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள், அதனை ஹேக் செய்து பாஸ்வேர்டு பயன்படுத்தி ஜிபி மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒருவரது வங்கிக்கணக்கிற்கு அந்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகிராமன், தனது விலை உயர்ந்த செல்ேபான் திருடு போனது குறித்து நேற்று இரவு குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து வேலூர் சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். விவசாயியின் செல்போனை திருடிச்சென்று ஹேக் செய்து பணத்தை அபேஸ் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post விவசாயியின் செல்போனை ஹேக் செய்து ₹11 ஆயிரம் அபேஸ் சைபர் கிரைம் போலீசார் விசாரணை குடியாத்தம் காய்கறி சந்தையில் திருட்டுபோனது appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Abe ,Kudiatham ,Mudaliar Lake… ,Dinakaran ,
× RELATED பூண்டு விலை உயர்ந்து கிலோ ₹600 வரை...