×
Saravana Stores

ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடாமல் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: தலைமைச்செயலர் முருகானந்தம் அறிவுரை

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்கி விடாமல் புதிய தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தலைமைச்செயலர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், இணையம், கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் இரு பக்கமும் கூராக கொண்ட ஒரு வாள் போன்றதாக உள்ளதால் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நம் கையில்தான் உள்ளது. இணையவழி சாதனங்களின் பயன்பாட்டை பொறுத்தவரை தொழில் சார்ந்த பயன்பாடுகளையெல்லாம் தாண்டி, சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுகள் போன்று சமுதாயத்தில் தீமைகளை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்தும் முறை சட்டத்தை இயற்றியுள்ளது. நம்முடைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தான் எதிர்காலம் என்பதில் மிகவும் தெளிவாக நாங்கள் இருக்கிறோம்.

ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிவிடாமல் புதிய தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தி மாணவ மாணவிகள், இளைஞர் சமுதாயம் நம்முடைய நாட்டை ஒரு நல்வழியில் பயனுள்ளதாக செயலாக்கவேண்டும்.
அதனை நாம் அனைவரும் இணைந்து செயலாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் முகமது நசிமுதின், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம், மாணவ மாணவியர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

The post ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடாமல் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: தலைமைச்செயலர் முருகானந்தம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Muruganandam ,Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Tamil Nadu E-Sports Authority ,Administration Directorate ,MRC Nagar ,
× RELATED கோவை மாநகரில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் நேரில் ஆய்வு