×
Saravana Stores

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்த ஒன்றிய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை கணிசமாக குறைந்து மக்கள் பயனடைவர். ஆனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சி.கனகராஜ், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் வாங்குகின்றன. அதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை 60 முதல் 70 ரூபாயாக குறையும். எரிவாயு, பெட்ரோல், டீசல் இல்லாமல் அன்றாட வாழ்வை வாழ முடியாது என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கை பொறுத்தவரை அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேட்டனர். அதற்கு, ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2020ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.

The post பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union government ,CHENNAI ,C. Kanagaraj ,Madras High Court ,Dinakaran ,
× RELATED ஒருசார்பாக தகவல்கள் வெளியீடு...