×
Saravana Stores

தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்போது இவற்றைத்தான் காண வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா?

-த.சந்திரமோகன், சேலம்.

தாமரை புஷ்பம், பொன், தீபம், கண்ணாடி, சூரியன், தணல், சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், கோபுரம், மேகம் சூழ்ந்த மலை, கன்றுடன் கூடிய பசு, தனது வலதுகை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு ஆகியவை தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்கவை என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுபவர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர, மற்ற நேரங்களில் உறங்கி
எழும்போது பொருந்தாது!

?ராசிகளில் நெருப்புராசி, நீர் ராசி என்ற பிரிவினை இருப்பது உண்மைதானா?

– ராஜாராமன், கும்பகோணம்.
உண்மைதான். பன்னிரு ராசிகளில் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றையும் ‘நெருப்பு ராசிகள்’ என்றும், ‘ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவற்றை ‘நில ராசிகள்’ என்றும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இம்மூன்றையும் ‘காற்று ராசிகள்’ என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றை ‘நீர் ராசிகள்’ என்றும் ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். கேற்ற அவற்றுக்கேற்றவாறு நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுபவர்களாகவும், நில ராசிக்காரர்கள் பொறுமைசாலிகளாகவும், காற்று ராசிக்காரர்கள் அலைபாயும் மனதினை உடையவர்களாகவும், நீர் ராசிக்காரர்கள் எளிதில் இளகுகின்ற மனதினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

?தீய பழக்கங்களில் இருந்து மீள வழி என்ன?

– சங்கர், விழுப்புரம்.

இருட்டை விலக்குவதற்கு ஒரே வழி அங்கே வெளிச்சம் தருகின்ற ஒரு விளக்கைப் போடுவதுதான். விளக்கைப் போடுகின்ற செயல் செய்யாத வரை, என்னதான் முயன்றாலும், இருட்டு விலகாது. அதைப் போலவே, தீய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களைக் கைகொள்வதுதான். நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது தீய பழக்கங்கள் தானாகவே விடை பெற்றுச் சென்றுவிடும் என்பது அனுபவ உண்மை.
நல்ல மணமுள்ளதொன்றை நண்ணிஇருப்பதற்கு
நல்ல மணமுண்டாம்-நயமதுபோல் – நல்ல
குணமுடையோர் தங்களிடம் கூடியிருப்பார்க்கு
குணமதுவேயாம் சேர்த்திகொண்டு
– என்ற பாடல் இதனை தெரிவிக்கும்.

?உடலுக்கு உணவு முக்கியம்தானே?

– ஞானசேகரன், தஞ்சாவூர்.
நிச்சயம் முக்கியம்தான். உணவுக்காகத் தான் இத்தனை அலைச்சல். அன்னமின்றி உயிர் வாழ்க்கை வாழ முடியாது. ஆனால், அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று திருவள்ளுவர் நமக்கு வழி சொல்லி இருக்கிறார்.மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.ஒருவன் முதலில் உண்டது சீரணமாகி விட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழக் கூடாது. சுவாமி வேதாத்திரி மகரிஷி மிக அருமையாகச் சொல்லுவார். அளவாக உணவு சாப்பிட்டால் உடல் ஜீரணிக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் சாப்பிட்ட உணவே உடலை ஜீரணித்து விடும்.

?மனிதர்களின் கண்களில் பிறர் தப்பு அதிகம் படுமா? நல்லது அதிகம் படுமா?

– ராமகிருஷ்ணன், கடலூர்.
தவறுதான் அதிகம் படும். விளக்கெண்ணெய் வைத்து பார்ப்பார்கள். நல்லது செய்தால் கவனிக்காதது போல் இருப்பார்கள். ஒரு வார்த்தை பாராட்டிப் பேசுவதற்கு நேரம் இருக்காது. தப்பு செய்யும் பொழுது மட்டும் மணிக்கணக்காக அறிவுரைகூற ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு நேரம் கிடைத்துவிடுகிறது. பொதுவாக உலகியலில், ஒருவருடைய கண்ணீரை யாரும் கவனிப்பது இல்லை. துன்பங்களை யாரும் கவனிப்பதே கிடையாது. வலிகளை யாரும் பொருட்படுத்துவதே கிடையாது. ஆனால் எல்லோரும் தவறுகளைக் கவனிக்கிறார்கள். ஆனால் ஆழ்வார் நமக்கு, “குற்றங்களைத் தள்ளுங்கள். நல்லவற்றை கவனித்துப் பாராட்டுங்கள்” என்று சொல்லுகின்றார். “குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் இன்று முதலாக என் நெஞ்சே” என்று தன்னுடைய நெஞ்சுக்கு அவர் நல்ல வழியைக் காட்டுகின்றார். அது நமக்கும்தான்.

?ஏன் கோயில் மூலமூர்த்தி சிலைகள் கருங்கல்லில் செய்யப்படுகின்றன?

– அருள்பிரகாஷ், கன்னியாகுமரி.
உலோகத்தின் ஆற்றலைவிட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். குறிப்பாக, கருங்கல் எந்த சக்தியையும் தன்வசப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளைக் கொண்டுள்ளது. கருங்கல்லில் தண்ணீர் உள்ளதால் அது குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கிறது. நிலம் என்பது கல்லுக்குள் இருக்கிறது. கருங்கல்லில் நெருப்பும் உண்டு. அதனால்தான் ஒன்றுடன் ஒன்று உரசும்போது தீ பற்றுகிறது. கல்லில் காற்று உள்ளதால்தான் கருங்கல் பாறைகளுக்கு இடையில் தேரைகள் வாழ்கின்றன. ‘‘கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன்’’ என்பார்கள். ஆகாயத்தைப் போலவே வெளியில் உள்ள சத்தங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் திறன் கல்லுக்குள் உண்டு. கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோயிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது. அத்தகைய மூர்த்தியை நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது. நம் பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்கிறது.

அருள்ஜோதி

The post தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்போது இவற்றைத்தான் காண வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா? appeared first on Dinakaran.

Tags : T. Chandramohan ,Salem ,Shiva ,Dinakaran ,
× RELATED பயணிகள் நடந்து செல்லும் பாதைகளில் மது...