×

மேட்டுப்பாளையம் அருகே தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார் தீப்பற்றி எரிந்தது; வாலிபர் உடல் கருகி பலி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதில் வாலிபர் உடல் கருகி பலியானார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறுமுகை லிங்காபுரம் கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் நவீன் (27) என்பவர் தனக்கு சொந்தமான காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி கார் முழுவதுமாக தீக்கிரையானது.

கார் பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் லாக் ஆனதால் காரை ஓட்டி வந்த நவீன் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனால் டிரைவர் சீட்டிலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். இச்சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.

காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான நவீனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு வேளையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சிறுமுகை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மேட்டுப்பாளையம் அருகே தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார் தீப்பற்றி எரிந்தது; வாலிபர் உடல் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Sivaraj ,Sirumugai Lingapuram Govindanur ,Mettupalayam-Annur road ,Coimbatore ,
× RELATED பள்ளத்தில் கவிழ்ந்து கார் தீப்பற்றி வாலிபர் பலி