- பவானி
- அம்மன்
- அரானியார் பாலம்
- Uthukottai
- பெரியபாளையம் ஆரண்யா நதி
- அம்மன் கோயில்
- சென்னை
- பவானி அம்மன் கோயில்
ஊத்துக்கோட்டை, செப். 11: பெரியபாளையம் ஆரணியாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பகுதி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்குள்ள ஆரணி ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணியாற்றை கடந்துதான் அம்மன் கோயிலுக்குச் செல்லவேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த தரைப்பாலத்தை கடந்துதான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்ல முடியும். இந்த பாலம் பவானி அம்மன் கோயிலை இணைக்கும் முக்கிய பாலமாகும். மேலும் சென்னையிலிருந்து திருப்பதி, புத்தூர் செல்பவர்களும் பெரியபாளையம் தரைப்பாலத்தை கடந்துதான் செல்வார்கள். இந்நிலையில் பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 1999ம் ஆண்டு அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு மக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். தற்போது பாலத்தின் அருகில் உள்ள கடைகளில் இருந்து குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும், கோழி கழிவுகளையும் பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
பாலத்தின் அருகில் சிவன் கோயில் உள்ளதால், இந்த சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் இந்த குப்பை கழிவுகளால் பாலத்தின் அடிப்பகுதி சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் உள்ள கழிவுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் ஆரணியாற்றின் பாலத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.