- சேலம் சிறை
- வேலூர் டி.ஐ.ஜி.
- சேலம்
- CBCID
- வேலூர் சிறை
- டிஐஜி
- சிவகுமாரின்
- Bochampalli
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- சிறையில்
- தின மலர்
சேலம்: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடியதாக கூறி தாக்குதலுக்குள்ளான ஆயுள் கைதியிடம் சேலம் சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் (30). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை, சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றபோது ரூ.4.25 லட்சத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிறையில் தனியறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிவக்குமாரை சேலம் சிறைக்கு மாற்றவும், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிற 17ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதர் உள்ளிட்ட குழுவினர் 3 கார்களில் நேற்று காலை 10.30 மணிக்கு சேலம் சிறைக்கு வந்தனர். அங்கு, கூடுதல் கண்காணிப்பாளர் அறையில் வைத்து கைதி சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதனை வீடியோவில் பதிவு செய்தனர்.
டிஐஜி வீட்டில் பணம் இருந்த இடம் வரை செல்ல அனுமதி உண்டா? அவ்வளவு செல்வாக்கை பெற்றது எப்படி? கூடவே வரும் வார்டருக்கு தெரியாமல் பணத்தை எடுத்துச்சென்று மண்ணில் புதைத்தது எப்படி? என்பது போன்ற கேள்விகளை கேட்டறிந்தனர். சிறை டாக்டர் கார்த்திகேயனிடம் கைதிக்கு இருந்த காயங்கள் குறித்து கேட்டறிந்தனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இன்று (புதன்) வேலூர் மத்திய சிறையில் கைதி சிவக்குமாருடன் இருந்த மற்ற கைதிகள், வார்டர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதன்முடிவில்தான் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. இதற்கிடையில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கடந்த ஓராண்டிற்கு முன்பு தான் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜெயிலராக சேரும்போது நல்ல நிலையில் இருந்த அவருக்கு திடீரென கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதனால், அவருக்கு பெண் அதிகாரிகள் உதவியாக இருந்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
The post வேலூர் டிஐஜி வீட்டில் ரூ.4.25 லட்சம் திருடியதாக தாக்குதல் சேலம் சிறையில் கைதியிடம் 10 மணி நேரம் விசாரணை: வாக்குமூலம் வீடியோவில் பதிவு appeared first on Dinakaran.