×
Saravana Stores

திருவான்மியூர் பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய ரதம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள் திருவான்மியூரில் உள்ள அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலில் உபயதாரர் நிதி ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரதத்தினை இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், திராவிட மாடல் ஆட்சியில் பல நூறு ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த திருக்கோயில்கள், நீதிமன்ற வழக்கின் காரணமாக திருப்பணிகளுக்கு தடை இருந்த நிலையில் துரிதமான செயல்பட்டு சட்டப்போராட்டம் நடத்தி குடமுழுக்குகளை நடத்தி வருகின்றது. அந்த வகையில் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு 66 ஆண்டுகளுக்கு பின் 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கினை முடித்து குடமுழுக்கு செய்த பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு.

அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயில் மொத்த நிலப்பரப்பான 3.11 ஏக்கரில் எங்கு அமர்ந்திருந்தாலும் ஒரு நல்ல உணர்வினை உணரமுடியும். 1958 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 12.7.2024 அன்று வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. பாம்பன் திருக்கோயிலை நிர்வகிக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த குப்புசாமி அவர்கள் இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இன்றைய தினத்தில் ரூபாய் 13 லட்சம் செலவில் உபயதாரர் திரு.சதீஷ்குமார் அவர்கள் புதிய திருத்தேரினை உருவாக்கி திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்த திருக்கோயிலில் திங்கள், புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 500 நபர்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் 800 நபர்களுக்கும், சித்ரா பௌர்ணமி, குருபூஜை மற்றும் மயூர வாகன சேவன விழா ஆகிய நாட்களில் ஆயிரம் நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 2,098 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் வருகின்ற 15 ஆம் தேதி 86 திருக்கோயில்களும், 16 ஆம் தேதி 25 திருக்கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 6,073 கோடி ரூபாய் மதிப்பிலான 6,853.14 ஏக்கர் நிலங்கள் இதுவரையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபின் பல்வேறு திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் மனமுவந்து தாராளமாக நிதியை வழங்கி வருகின்றனர். இதுவரை ரூ. 1,012 கோடி உபயதாரர் நிதியாக வரப்பெற்றுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின் ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருவதோடு ரூ.11.92 கோடி மதிப்பீட்டில் 53 தேர்கள் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 28.44 கோடி மதிப்பீட்டில் 172 திருத்தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 29 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தங்கத்தேர்களும், ரூ. 27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரியபாளையம் புதிய தங்கத்தேர் வருகின்ற 14 ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த செலுத்தும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. திருத்தணி புதிய வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது. இப்படி எண்ணற்ற சாதனைகளை புரிந்து வருகின்ற திராவிட மாடல் ஆட்சியில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் மகிழ்ச்சியடைந்து போற்றுகின்ற ஆட்சியாக இந்த அரசு வீறுநடை போட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

The post திருவான்மியூர் பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய ரதம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். appeared first on Dinakaran.

Tags : THIRUVANMIUR BAMBAN SWAMI TEMPLE ,MINISTER ,SEKARBABU ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,K. Stalin ,Minister of the Department of ,Hindu ,Religious Studies ,B. K. ,Arulmigu Bamban Swami Temple ,Thiruvanmiur ,Bomban Swami Temple ,
× RELATED வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476...