*பாறைகள் சரிந்து வீடுகள் தரைமட்டம்
*வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்
திருமலை : வட ஆந்திராவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சரிந்து பழங்குடியின மக்கள் மண்ணில் புதைந்ததனர். மேலும் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.ஆந்திராவில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழையால் கிருஷ்ணா, என்.டி.ஆர், பல்நாடு மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கிருஷ்ணா நதியில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் விஜயவாடாவில் இரண்டு நாட்களில் 30 செ.மீ மழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்து ஒரு வாரமாக விஜயவாடா நகரம் முழுவதும் சிக்கி தற்போது சில இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பியது.
சில இடங்களில் தற்போதும் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. இந்த வெள்ளத்தால் மட்டும் 45 பேர் இறந்தனர். இதில் என்.டி.ஆர். மாவட்டத்தில் மட்டும் 35 பேர் இறந்தனர். இந்த வெள்ள பாதிப்பால் ₹6882 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு ஆந்திர அரசு முதற்கட்ட அறிக்கை அனுப்பி உள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட ஆந்திரா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர் மழையால் ஆறுகள், ஓடைகள், சீற்றோடைகள் நிரம்பியதால், பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
வம்சதாரா, நாகாவலி, மகேந்திரதனயா ஆறுகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுமுரு பெட்கெட்டா கிராம் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரணஸ்தலம் மண்டலத்தில் புச்சவாணி கெடா நிரம்பியதால் சுமார் 40 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. படாப்பட்டினம் அருகே உள்ள தரைப்பாலத்தில் மகேந்திரதனயாவின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், படாப்பட்டினத்தில் இருந்து கே.கோபாலபுரம், எச்.கோபாலபுரம் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் கோபாலப்பட்டினம் அருகே உள்ள ராமகிருஷ்ணா நகர் காளிமாதா அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. மேலும் விசாகப்பட்டினத்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள ஓடைகள் நிரம்பி வழிகின்றன.
பல மதகுகள் அடித்து செல்லப்பட்டன. கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜி.கே.வீதி மண்டலம் வஞ்சலா, தேவாரப்பள்ளி ஊராட்சிகளில் ஓடைகள் பெருக்கெடுத்து ஓடியதால் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. வஞ்சல் ஊராட்சியைச் சேர்ந்த செமகெட்டா பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மாரேடுமில்லி மண்டலம் சாவடிகோட்டை ஊராட்சி, போட்லங்கா கிராமம் அருகே உள்ள பெல்லி ரேவு கால்வாய் கால்வாயில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், மேல் பகுதி கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராஜவொம்மங்கி மண்டலங்களில் உள்ள ஜட்டாங்கி, மாதேரு, கிண்டிரா பெட்டேரு, ஒட்டிகட்டா, கிஞ்சரட்டி, நெல்லிமெட்லா ஓடைகள் நிரம்பி வழிகின்றன. பார்வதிபுரம் மான்யம் மாவட்டம் பேச்சிபெண்டாவில் பெய்த மழையால் பருத்தி மற்றும் உளுந்து பயிர்கள் சேதமடைந்தன.
காக்கிநாடா மாவட்டத்தில் காக்கிநாடா, சமர்லகோட்டா, பித்தாபுரம், கொல்லப்ரோலு, ஏலேஸ்வரம், ஜக்கம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கனமழை பெய்தது. தவலேஸ்வரம் பகுதியில் உள்ள ஏலேறு நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவு வெள்ள நீர் வருவதால் கீழ் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டம், லாவேரு மண்டலம், புததாவலசா மற்றும் பெசிபுரம் இடையே உள்ள சிட்டிகெட்டா தரைப்பாலத்தில் இருந்து சென்ற லக்கேஜ் வேன், தண்ணீர் பெருக்கத்தில் சிக்கியது. அப்பகுதியினர் டிராக்டர் மூலம் வேனை இழுத்து வரும் போது, கயிறு அறுந்து, வேன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது.
அக்கம் பக்கத்தினர் எச்சரிக்கை செய்து வேனில் இருந்த டிரைவர் கே.வாசு, கிளீனர் பி.அப்பலராஜு ஆகியோரை காப்பாற்றினர். அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளியில் நேற்றுமுன்தினம் பலத்த கனமழை பெய்தது. இதில் நள்ளிரவில் பழங்குடியினரின் வீடுகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான மண் மற்றும் கற்கள், பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. இதனால், சில வீடுகள் இடிந்து மண்ணோடு மண்ணாக புதைந்தது.
இதில் பலர் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளனர். விபத்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணி நடந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலைப்பகுதியில் சிக்கி தவித்த மக்கள்
விசாகப்பட்டினத்தில் அரிலோவா, கோபாலப்பட்டினம், விசாலாக்ஷி நகர், கைலாசகிரி, கஜுவாகா, பெண்டுருத்தி, வேப்பகுண்டா, சிம்மாசலம் ஆகிய மலைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மலைப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். மலைப்பகுதியில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும் நடைபெறுகிறது.
கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி
காகுளம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் பொளக்கி மண்டலம், முப்பிடி கிராமத்தை சேர்ந்த தொங்கனா லட்சுமிதேவி(80) எதிர்பாராதவிதமாக வம்சதாரா கால்வாயில் கால் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டு காணாமல் போனார். அவரை தேடி வருகின்றனர்.
The post வட ஆந்திராவில் மீண்டும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்த பழங்குடியின மக்கள் appeared first on Dinakaran.