மதுரை, செப். 10: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உச்சம் தொட்டிருந்த காய்கறிகள் விலை சமீப நாட்களாக மெல்ல சரிந்து வருகிறது. இது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை அடிமட்ட அளவில் விலை சரிவிற்கு ஆளாகி வருவது விவசாயிகளுடன், வியாபாரிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிலோ ரூ.40 வரை விற்று வந்த வெண்டைக்காய் விலை அதிகமாக சரிந்து நேற்று கிலோ ரூ.10ஐ தொட்டது.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி சின்னமாயன் கூறுகையில், ‘காய்கறிகள் விலை மெல்ல சரிந்து வரும் நிலையில், வெண்டைக்காய் விலை மேலும் சரிந்துள்ளது. மதுரையை சுற்றிய கிராமங்களில் இருந்தே இந்த வெண்டைக்காய் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மதுரையின் 30 கிமீ தூர சுற்றளவு கிராமங்களில் இருந்து வருவதால், தோட்டத்தில் பறித்த சில மணிநேரங்களில் விற்பனைக்கு வரும்.
தற்போது வரத்து அதிகரிப்பால், இதுவரை இல்லாத வகையில் வெண்டைக்காய் விலை மிக சரிந்து, கிலோ ரூ.10க்கு விற்கிறது’ என்றார். வெண்டைக்காய் விலைச்சரிவால் தோட்டத்திலிருந்து காய்களை பறிக்க கூலி, கொண்டு வரும் வாகன செலவு உள்ளிட்டவை கருத்தில் கொண்டு அப்படியே செடியிலேயே காய்களை விட்டு விடும் நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
The post மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை சரிந்தது appeared first on Dinakaran.