- of
- தொடக்கப்பள்ளி
- கல்வி
- சென்னை
- தொடக்கக் கல்வி
- ஆரம்ப கல்வித் துறை
- பள்ளிக் கல்வித் துறை…
- இயக்குனர்
- தின மலர்
சென்னை: ஆசிரியர்களை பள்ளியில் தக்க வைத்துக் கொள்வதற்காக போலி மாணவர்களை வருகை பதிவேட்டில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார கல்வி அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியரையும் தொடக்க கல்வி இயக்குநர் சஸ்பெண்ட் செய்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வில்லிவாக்கம் வட்டார கல்வி அதிகாரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை இருவரும் தொடக்க கல்வித்துறையின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகையில் முறைகேடு செய்த காரணத்தால் துறைக்கு அதிக செலவினம் ஏற்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் அடங்கிய, வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 566 மாணவ மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் தினசரி 432 பேர் பள்ளிக்கு வருவதாகவும் தொடக்க கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த பள்ளிக்கு தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வருகைப் பதிவில் 219 மாணவ மாணவியர் மட்டுமே அன்று வருகை புரிந்துள்ளனர். பின்னர் அதுகுறித்து நடத்திய விசாரணையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக கூடுதலாக போலி பெயர்களில் மாணவர்களை எண்ணிக்கையையும் பெயர்களையும் பதிவு செய்துள்ளது தெரியவந்தது. போலியாக அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு கணக்கு காட்டியதன் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை அந்த பள்ளியில் நியமிக்க வேண்டியதாயிற்று.
இதன் மூலம் அதிகப்படியான நிதி இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொன்னேரி கல்வி மாவட்டம், வில்லிவாக்கம் வட்டார கல்வி அதிகாரி ஜெ. மேரிஜோசபின், மற்றும் பம்மது குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.லதா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மறு உத்தரவு வரும் வரையிலோ அல்லது அனுமதி இன்றியோ மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
The post அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக போலி கணக்கு பள்ளி தலைமை ஆசிரியை கல்வி அதிகாரி சஸ்பெண்ட்: தொடக்க கல்வி இயக்குநர் நடவடிக்கை appeared first on Dinakaran.