×

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழகத்திற்கு நிதி தராமல் ஒன்றிய அரசு மறுத்து வருவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முடக்கும் விதமாக ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டிய ஒன்றிய அரசு, பாஜ ஆட்சி அல்லாத மாநிலங்களை பாரபட்சமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்தி வைப்பதை தொடர்ந்து செய்துவருகிறது. இதை அடிக்கடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி கண்டித்து வந்துள்ளார் கடந்த ஆண்டு பெருவெள்ளத்தால் சென்னை நகரமும் தென்மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி பலத்த இழப்புகளை சந்தித்தது. இதற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவே இல்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.

ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதால், அரசுக்கு மறைமுகமாக நெருக்கடி தரும் வகையில் பல்வேறு கல்வி திட்டத்தின் கீழ் தர வேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. குறிப்பாக பிஎம் ஸ்ரீ எனப்படும் பிரதமர் பள்ளி திட்டத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு மறைமுக மிரட்டலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் இனி நிதி தரப்படும் என்ற வகையில் ஒன்றிய அமைச்சர் பேசி வருகிறார்.

இந்நிலையில், சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா என்று அதிரடியாக பதில் கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதேவேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது இப்படித்தான் ஒன்றிய பாஜ அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா? முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் மட்டுமல்ல, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* சிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா?

* தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதா?

* கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா?

The post தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Union Government ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Union BJP government ,Tamil Nadu government ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...