×
Saravana Stores

மருத்துவம், ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பதை பரிசீலிக்க ஒன்றிய அமைச்சர்கள் குழு அமைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தொடர் போராட்டங்கள், எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து தீர்மானிக்க அமைச்சர்கள் குழு அமைப்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வரி வசூலை அதிகரிப்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு அரசுக்கு ஜிஎஸ்டி ரூ.90,000 கோடி கிடைத்தது. தற்போது இது ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது.

குறிப்பாக மருத்துவ காப்பீடு மீதான 18 சதவீத ஜிஎஸ்டியால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். பிரீமியம் தொகையை குறைக்க வழி வகுக்கும் வகையில் மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  ஆனால், ஒன்றிய அரசு இது தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்தும், வரியை குறைக்க வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு மாதம் முன்பே நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.

நாடாளுமன்றத்திலும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில், 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து பரிசீலிக்க, அமைச்சர்கள் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவுக்கு பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமை வகிப்பார். இந்தக் குழு இதுகுறித்து பரிசீலனை செய்து, அக்டோபர் இறுதியில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.இந்தக் குழுவில் புதிய உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

இதுபோல், புற்றுநோய் மருந்துகளுக்கு தற்போது உள்ள 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நொறுக்குத் தீனிகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுபோல், ஒன்றிய அரசு கடன்களை திருப்பி வழங்கவும் வட்டி செலுத்தவும் இழப்பீடு செஸ் கட்டணத்தை 2026 மார்ச்சுக்குப் பிறகும் வசூலிப்பது தொடர்பாக முடிவு செய்ய மற்றொரு அமைச்சர்கள் குழு அமைக்கப்படும். தற்போதைய செஸ் வரி வசூலின்படி கடன்கள் ஜனவரி 2026ல் திருப்பி செலுத்தப்படும்.

மார்ச் வரையிலான அடுத்த 2 மாதங்களில் வட்டி தொகை செலுத்தப்படும். அதற்கு மேலும் வட்டி செலுத்த வேண்டி வரும் என்பதால் இதற்கான செஸ் வரி வசூலை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள், ஆய்வு மையங்கள் பெறும் நிதிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவை ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான ஜிஎஸ்டியைப் பொருத்தவரை, 2023 அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த விதிகளின்படி ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் சூதாட்ட விதிகளில் பெட்டிங் தொகைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

ஆனால், திறன் விளையாட்டு மற்றும் சூதாட்டம் இரண்டும் வித்தியாசம் உள்ளதாக கூறி பல நிறுவனங்கள் வரியை செலுத்தவில்லை. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது, ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்களும் 28 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும் என விளக்கப்பட்டது.

மேலும், இதற்கேற்ப ஒன்றிய ஜிஎஸ்டி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதுபோல், இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நடத்தும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசு அந்த இணைய தளங்களை முடக்கும் என அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு இந்த வரி விதிப்பு பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் வரி சீரமைப்பு தொடர்பாகவும் கவுன்சில் கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.

* ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?
டிஜிட்டல் பரிவர்த்தனை, குறிப்பாக சில்லறை தட்டுப்பாட்டால் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு அடுத்ததாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.2,000க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளை கையாளுபவர்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. இந்நிலையில், மேற்கண்ட வரம்புக்கு உட்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற வரி விதிப்பு ஒன்றிய அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் இது குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிட்ட உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம் சந்த் அகர்வால், ‘‘ரூ.2,000 வரையிலான டெபிட்கார்டு,கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்காக நிறுவனங்களின் கேட்வே கட்டணத்துக்கு 18 சதவீத வரி விதிக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு எடுக்க மேலும் ஆய்வு செய்ய நிர்ணய குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

The post மருத்துவம், ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பதை பரிசீலிக்க ஒன்றிய அமைச்சர்கள் குழு அமைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Union ,GST ,Council ,New Delhi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,India ,GST Council ,Dinakaran ,
× RELATED விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும்...