பாரிஸ்: பாரிஸில் நேற்றுடன் முடிந்த 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் கடைசி நாளான இந்தியர்கள் பங்கேற்கும் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஒற்றையர் பிரிவு கூம்பு வடிவ படகுப் போட்டியில் இந்தியாவின் பூஜா ஒஜா வெண்கலம் வென்றார். அதுதான் இந்தப்போட்டியில் இந்தியாவின் கடைசிப் பதக்கம். அதற்கும் முன்னதாக நவதீப் சிங் ஈட்டி எறிதல்(எப்41) போட்டியில் 47.32மீ தொலைவுக்கு ஈட்டி எறித்து இந்தியாவுக்காக 7வது தங்கத்தை வசப்படுத்தினார்.
தமிழ் நாட்டில் இருந்து பங்கேற்ற 6 பேரில் மாரியப்பன் தங்கவேல் ஹாட்ரிக் பதக்கம்(ரியோ, டோக்கியோ, பாரிஸ்) வென்று அசத்தினார். இவர் வென்ற வெண்கலத்துடன் தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன் வெள்ளி, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதிசிவன் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
கூடவே தங்கள் பிரிவுகளில் அபாரமாக விளையாடிய சோலைமலை சிவராஜன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். மொத்தத்தில் இந்தப்போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13வெண்கலம் உட்பட 29 பதக்கங்களை அள்ளியுள்ளது. அதே பாரிசில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களை விட இது கிட்டதட்ட 5மடங்கு அதிகம்.
The post பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பூஜா வென்றது கடைசி பதக்கம் appeared first on Dinakaran.