* செல்போன் கடைக்காரர் பாலியல் தொழிலுக்கு மாறியது எப்படி? ரூட் போட்டு கொடுத்த டெல்லி தலைவன் திடுக் தகவல்
கோவை: ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா அழகிகளை வைத்து கோவையில் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் நடத்திய கும்பலின் தலைவனான டெல்லி கபீர் சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழில் நகரமான கோவை, சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2வது பெரிய நகரமான கோவை தொழில், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நைஜீரியா, கென்யா, பூடான் உள்ளிட்ட சில நாடுகளில் இருந்தும் கோவைக்கு மாணவர்கள் அதிகளவில் வந்து படித்து வருகின்றனர். கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தொழில் முறை பயணமாக கோவைக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும், தொழிலதிபர்களையும் குறிவைத்து பாலியல் தொழில் கும்பல் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இத்தொழிலை தடுக்கவும், அவர்களை பிடிக்கவும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில், வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் 2 பாலியல் தொழில் பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புரோக்கராகவும், பாலியல் தொழில் கும்பல் தலைவனாகவும் தேனி மாவட்டம் இபி ஆபிஸ் ரோட்டை சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா (41) என்பவர் செயல்பட்டது தெரியவந்தது.
இவருக்கு உடந்தையாக போத்தனூர் காந்திஜி ரோட்டை சேர்ந்த ஸ்டீபன்சன் (32) இருப்பதும் கண்டறியப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அப்போது ஸ்டீபன்ராஜ் இருப்பிடம் தெரியவந்தது. அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் போலீசிடம் இருந்து தப்பிக்கும் வகையில் பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மூலம் கும்பல் தலைவனான சிக்கந்தர் பாதுஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சிக்கந்தர் பாதுஷா மீது இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும்பாலும் சிக்கந்தர் பாதுஷா கொல்கத்தாவில் பதுங்கி இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். நாடு முழுவதும் நெட்வொர்க் வைத்துள்ள இவர்கள் 117 ஏஜென்டுகள் மூலம் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு அழகிகளையும் சப்ளை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக தாய்லாந்து, ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த அழகிகளின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி, ஒவ்வொரு அழகிக்கும் தனி ரேட் ‘பிக்ஸ்’ செய்துள்ளனர். ஒரு மணி நேரம், நாள் முழுவதும், இரவு மட்டும் என தனித்தனியாக குறிப்பிட்ட தொகை வசூல் செய்து வந்துள்ளனர். ஒரு இரவுக்கு ரூ.30 ஆயிரம் வரை பெற்றதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் கோவையில் குறிப்பிட்ட 8 நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலீசாரின் தீவிர விசாணையில் தலைமறைவான சிக்கந்தர் பாதுஷா மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சிக்கந்தர் பாதுஷா கடந்த 2008 முதல் 2013 வரை திண்டுக்கல்லில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார்.
அதில் அவருக்கு ரூ.55 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. அதனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டார். அந்த நேரத்தில் பல மோசடி வழக்குகளில் தொடர்புடைய ஷேக் அப்துல் காதர் என்பவருடன் சிக்கந்தர் பாதுஷாவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஈரோட்டில் பாலியல் தொழில் செய்து வந்த கண்ணன் என்பவரை சிக்கந்தர் பாதுஷாவுக்கு ஷேக் அப்துல் காதர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஷேக் அப்துல் காதருடன் பழகியதன் மூலமாக பாலியல் தொழிலை எப்படி செய்வது? என்பதை சிக்கந்தர் பாதுஷா தெரிந்துகொண்டார். இதன்பின்னர்தான் அவர் அழகிகளை சப்ளை செய்யும் தொழிலில் இறங்கினார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த தொழிலை செய்து வந்துள்ளார். அழகிகளை சப்ளை செய்யும் ‘டீலிங்’ எதையுமே நேரில் செய்வது இல்லை. அனைத்தையும் ஆன்லைனில் அதாவது வாட்ஸ் அப் மூலமாகவே செய்து வந்துள்ளார். பண பரிவர்த்தனையும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்துள்ளது. இதன்மூலம் அவருக்கு பணம் அதிக அளவில் குவிந்தது. அந்த பணத்தின் மூலம் பெங்களூரில் பிரியாணி ஓட்டல் நடத்தி வந்துள்ளார். போலீசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சிக்கந்தர் பாதுஷா நாடு முழுவதும் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்துள்ளார்.
ஆனால் கோவை தனிப்படை போலீசார் கடந்த 4 மாதமாக அவரின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் அடிப்படையில்தான் தற்போது சிக்கந்தர் பாதுஷா போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரது வாட்ஸ் அப் குழுவில் உள்ள 117 ஏஜென்டுகளையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் குறித்த தகவல்களை திரட்டும் முயற்சியில் 4 தனிப்படை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த பாலியல் தொழில் கும்பல் தலைவனாக உள்ள கபீர் சிங் என்பவர் தலைமையில்தான் இந்த வாட்ஸ் அப் குழு செயல்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் புரோக்கர்களை நியமித்து வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. எனவே இந்த மொத்த பாலியல் தொழில் கும்பலையும் அந்தந்த மாநில போலீசார் உதவியுடன் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை?
கோவையில் ரெகுலராக 8 நட்சத்திர ஓட்டல்களில் அழகிகள் தங்கி இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஓட்டல்கள் எவை? என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்க வில்லை. கோவை அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ், நஞ்சப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் தங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்ததாக நட்சத்திர ஓட்டல் மீதும் உரிய விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
* ரவுடிகளுடன் தொடர்பு
பாலியல் தொழில் புரோக்கர் சிக்கந்தர் பாதுஷா, ரவுடிகளுடனும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். பாலியல் தொழிலில் ஏற்படும் போட்டி மற்றும் மிரட்டல்களை சமாளிக்க அவர் இந்த யுக்தியை பயன்படுத்தியதாக தெரிகிறது. மேலும் சில ரவுடிகளின் வங்கிக்கணக்கிற்கு அவர் பணப்பரிமாற்றம் செய்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை appeared first on Dinakaran.