×
Saravana Stores

தொழில் வளர்ச்சியில் முன்னிலை முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம் என அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப் பெருக்கோடு சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று அதற்குப் பிறகு, அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்டாக வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள். சிகாகோவிற்கு கலைஞர் வந்திருக்கிறார். தலைவர் கலைஞரின் அமெரிக்கப் பயணத்தில் எங்கெல்லாம் சென்றார் என்று எடுத்துப் படித்தேன். 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் நாள் வாஷிங்டனுக்கு வந்த தலைவர் கலைஞர் பல்வேறு இடங்களை பார்வையிட்டிருந்தார். அடுத்து, இதே சிகாகோவுக்கு வந்திருந்தார்.

வந்தவர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு தலைவர் கலைஞர் வந்தாரோ, அதேபோல் இன்று நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இங்கு வந்திருக்கிறேன். தொழில் வளர்ச்சியை பொருத்தவரைக்கும், நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்படியெல்லாம் முன்னிலை வகிக்கிறது – தமிழ்நாட்டில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்று சொல்லி, தொழில் தொடங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன்.

அதனால்தான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெருமையை அடைந்திருக்கிறோம். ‘அனைவரும் பிறக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால் தான், தனித்தனி தாயினுடைய வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்’ என்று சொல்வார் பேரறிஞர் அண்ணா. நாமெல்லாம் தனித்தனி தாயுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும் – நாம் எல்லோருக்கும் இந்த உறவை – பாசத்தை ஊட்டிய ஒரு தாய் இருக்கிறார், அவர்தான் தமிழ்த்தாய்.

தமிழினம் இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறோம். அந்த உயர்பொறுப்புகளுக்குக் கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதைச் சாத்தியப்படுத்தியது, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் சமூகநீதியும் அதற்காகப் பாடுபட்ட தலைவர்களும்தான். இதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காணப் பாடுபட்ட சமுதாயம். தலைவர் கலைஞர் கணினிக் கல்விக்கு தந்த முக்கியத்துவத்தால்தான், ஐ.டி. துறையில் தமிழ்நாடு முன்னேறியது.

கலைஞர் உருவாக்கிய டைடல் பூங்கா மாதிரி அப்போது வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக இல்லை. கலைஞர் அமைத்த அடித்தளத்தில், உலகத்தை தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்தோம்; தமிழ்நாட்டை உலகம் உள்வாங்கியது. அதற்கு சாட்சியங்களாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களை மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பரணாக நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12ம் நாளை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடுகிறோம்.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது.உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற 1,524 மாணவர்களை போர் காலத்தில் மீட்டு வந்தோம். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் இருந்து 83 தமிழர்களை மீட்டு வந்தோம். இஸ்ரேல் நாட்டுக்கு கல்வி கற்கச் சென்று படிப்பை தொடர முடியாத 126 பேரை மீட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,398 பேரை அயல்நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மீட்டு வந்தோம்.

மொத்தத்தில், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது என்ற உணர்வை நம்பிக்கையை நம்முடைய ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் ‘வேர்களைத் தேடி’. அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அமெரிக்க தமிழர்களாகிய நீங்கள் தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் உங்கள் குழந்தைகளிடம், ‘நம்முடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் இங்கு முதலமைச்சராக இருக்கிறார்.

அவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று சொல்லுங்கள். நான் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரமும் மகிழ்ச்சியான முகங்களும்தான் எப்போதும் என் ஞாபகத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிகாகோவின் துணைத் தூதர் சோம்நாத் கோஷ், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் 37 தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

* பட்டு வேட்டி, சட்டையில் வந்த முதல்வர்
சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக கூட்டம் வந்திருந்தது. இக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்து அசத்தினார். அமெரிக்க வாழ் தமிழர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார்.

* ‘புலம்பெயர் தமிழர்களின் நல்வாழ்வு சிறக்க வாழ்த்துகள்’
சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு. சிகாகோ நகரில் வெள்ளமென தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றை கண்டேன்.

கற்ற கல்வியால் – ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளை சொல்லி – அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

* ‘ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் வாருங்கள்’
இங்கு கூடியிருக்கும், உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள். மற்றவர்கள், சூழ்நிலைகளின் காரணமாகவும் பணிகளுக்காகவும் இங்கு வந்திருப்பீர்கள். அப்படி வந்து உங்கள் திறமையால் உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை. உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்குக் காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்.

உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்குச் செய்யுங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

The post தொழில் வளர்ச்சியில் முன்னிலை முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,PRESIDENT ,AMERICAN LIFE ,K. Stalin ,Chennai ,India ,American Life Tamil ,Nadu ,Chicago, USA ,Chicago Tamil Federation ,American Lives ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து...