×

அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் உணவில் விஷம் கலந்து தாய், மகள், மகன் கொலை?.. தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலை


அரக்கோணம்: அரக்கோணம் அருகே பூட்டிய வீட்டில் தாய், மகள், மகன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், தலைமறைவான கணவர், உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் விஜயன்(50). இவரது மனைவி மீனாட்சி(45). மகள் பவித்ரா(24). மகன் யுவனேஷ்(20). சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணம் சுவால்பேட்டை பகுதிக்கு குடிபெயர்ந்தனர். விஜயன் அரக்கோணத்தில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். மீனாட்சி வளர்புரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திலும், பவித்ரா அரக்கோணத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரிலும், யுவனேஷ் இச்சிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், மீனாட்சியின் உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு மீனாட்சிக்கு போன் செய்தனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மற்ற 3 பேர் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் சுவால்பேட்டைக்கு வந்து பார்த்தனர். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.தகவலறிந்து அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி, பவித்ரா, யுவனேஷ் ஆகியோர் சடலமாக கிடந்தனர். விஜயனை காணவில்லை. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் மர்மச்சாவு என வழக்கு பதிந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விஜயன் எங்கு சென்றார்? உணவில் விஷம் கலந்து கொடுத்து 3 பேரையும் கொலை செய்துவிட்டு தலைமறைவானாரா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி, அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்து வழக்கு விவரங்களை கேட்டறிந்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘வீட்டின் கதவை வெளிப்பக்கமாக இருந்தும் பூட்டும் வகையிலான பூட்டு என்பதால் விஜயன் வெளியில் இருந்து பூட்டிவிட்டு சென்றிருக்கலாம். மேலும் அவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ள நிலையில், ஏதேனும் உணவுப்பொருளில் தூக்க மாத்திரையுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் விஜயனுக்கு கடன் தொல்லை இருந்தது தெரியவந்தது. இதனால் வளர்புரம் கிராமத்தில் இருந்து, சுவால்பேட்டைக்கு குடும்பத்துடன் குடியேறி உள்ளார். கடன் தொல்லை அதிகரித்ததால் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தாய், மகள், மகன் இறப்புக்கு காரணம் தெரியும். விஜயனை பிடித்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும்’ என்றனர். பூட்டிய வீட்டில் தாய், மகள், மகன் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் தொங்கிய தூக்கு கயிறு
தாய், மகள், மகன் சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்த போலீசார் நோட்டு புத்தகம், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டில் மின்விசிறியில் தூக்கு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்களை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள விஜயன் தூக்கு கயிறு மாட்டிய பிறகு முடிவை மாற்றி தலைமறைவாகிவிட்டாரா? எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

The post அரக்கோணம் அருகே கடன் தொல்லையால் உணவில் விஷம் கலந்து தாய், மகள், மகன் கொலை?.. தலைமறைவான கணவனுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet district ,Dinakaran ,
× RELATED அரக்கோணம் அருகே சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம்