×

இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீலாது நபி வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள மீலாது நபி வாழ்த்துச் செய்தி: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். ‘உழைப்பவர்க ளின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்’ என எளியவர்களுக்காகப் பேசினார். ‘உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்’ எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். ‘கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்’ என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம்.

அன்பையும், ஈகையையும் சிறந்த குணங்களாக முன்னிறுத்திய அவரது பிறந்தநாளை இசுலாமிய மக்கள் ஏற்றத்துடன் கொண்டாடி மகிழ்ந்திட 1969ம் ஆண்டே அரசு விடுமுறை அளித்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. 2001ல் அன்றைய அதிமுக ஆட்சி இதனை ரத்து செய்த நிலையில், 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு மீலாதுன் நபியை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது. அவரது வழிநடக்கும், நமது திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது. வக்பு சட்டத் திருத்த மசோதா போன்றவற்றால் அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உரக்கக் குரல் கொடுத்து உறுதியாக உடன் நிற்கிறது. இசுலாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திமுக அரசின் சார்பில் மீண்டும் எனது மீலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீலாது நபி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DMK government ,Chief Minister ,M.K.Stalin ,Prophet ,Chennai ,Miladu Nabi ,Prophet Muhammad ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...