×

சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?… அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை பாதுகாத்து உரிய மனநல மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கே.வி.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், 2009ல் சென்னை உயர் நீதிமன்றம் சாலையில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க தேவையான நடவடிக்கை வேண்டும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி வேதராண்யம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகங்கள் மீட்டு, மனநல சிகிச்சைகளை அளிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, நாகப்பட்டினம் கலெக்டர், காவல்துறை, அரசு மருத்துவனை நிர்வாகத்திற்கு மனு அளித்தும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, உரிய சிகிச்சைகளை அளிக்கவில்லை என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, உரிய சிகிச்சைகள் வழங்க மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?… அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த...