×
Saravana Stores

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3000 காவலர்கள்

ஆவடி, செப். 7: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3000 காவலர்கள் ஈடுபடுத்த உள்ளதாக ஆணையரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய உள்ளனர். அந்த விநாயகர் சிலைகள் வரும் 15ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சுமூகமாக நடைபெற தகுந்த பாதுகாப்பு பணிகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடன் உடன் செயல்படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவின் பேரில், பொது இடங்கள், முக்கிய வழிபாட்டுத்தலங்கள், சிலை ஊர்வலம் செல்லும் வழித்தடங்கள், சிலை கரைக்கப்படும் இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் ஆணையாளர் தலைமையில், காவல் கூடுதல் ஆணையர்கள் உட்பட 5 காவல் துணை ஆணையர்கள் 2 காவல் கூடுதல் துணை ஆணையர்கள், 16 காவல் உதவி ஆணையர்கள், 75 காவல் ஆய்வாளர்கள், 250 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2700 காவலர்கள் என 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

909 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூரில் 196, திருத்தணியில் 297, ஊத்துக்கோட்டையில் 220, கும்மிடிப்பூண்டியில் 196 ஆகிய 4 உட்கோட்டங்களில் மொத்தம் 909 சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். மேலும், சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் திருவள்ளூர் காவல் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், சிலைகளுக்கு அந்தந்த பகுதிகளின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் – இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், பூஜை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் போன்றவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை போலீசார் பெற்றுள்ளனர். மேலும் பிரச்னைகள் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3000 காவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commissionerate ,Vinayagar Chaturthi festival ,Avadi ,Commissionerate ,Ganesha Chaturthi Festival ,Aavadi ,Police Commissionerate ,Aavadi Police Commissionerate ,
× RELATED எடப்பாடி பழனிசாமி புகாருக்கு காவல்துறை மறுப்பு