ஊத்தங்கரை: சொத்தை எழுதி தர மறுத்ததால் விஏஓ அலுவலகத்தில் தந்தை மற்றும் தங்கையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த விவசாயியை போலீசார் ைகது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் வரதன் (80). விவசாயி. இவரது மனைவி 30 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன்கள் லவகிருஷ்ணன்(57), கணேசன் (47), கிருஷ்ணன். மகள்கள் மணவள்ளி(55), மங்கம்மாள்(45). இதில் கிருஷ்ணன் 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் அளவில் நிலத்தை எடுத்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். மகள் மணவள்ளி கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தந்தை சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு அவரது நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயம் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் இறந்துவிட்டனர். இவரது மகள் கல்லாவியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இந்நிலையில் மணவள்ளி, தனக்கும் வாரிசுப்படி அப்பா சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு கடந்த 2015ல் ஊத்தங்கரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனால் அதிர்ச்சியான வரதன், ‘மகன் லவகிருஷ்ணனிடம் சொத்தை பிரிக்கக்கூடாது, நீதான் வழக்கை நடத்தவேண்டும்’ எனக்கூறியுள்ளார். லவகிருஷ்ணனும் வக்கீல்களை வைத்து வழக்கை நடத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 6.6.24ல் மணவள்ளி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. ‘வழக்குக்காக பல லட்சம் செலவு செய்துள்ளேன் எனவே சொத்தை பிரித்து தனக்கு தரவேண்டும்’ என தந்தையிடம் லவகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதில் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மகளுக்கே சொத்தை கொடுப்பேன் என வரதன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லவகிருஷ்ணன் அப்படி செய்தால் கொல்லாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று வரதன் தன்னுடைய சொத்து தொடர்பாக சான்று வாங்குவதற்கு மகள் மணவள்ளியுடன் மூன்றம்பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சென்றார். இதனையறிந்த லவகிருஷ்ணன் அங்கு அரிவாளுடன் சென்றார். அங்கும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன் அரிவாளால் தந்தை வரதனையும், தங்கை மணவள்ளியையும் சரமாரியாக வெட்டினார். இதில், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பி தங்கதுரை, விஏஓ கவியரசி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து லவகிருஷ்ணனை கைது செய்தனர்.
The post சொத்தை எழுதி தர மறுத்ததால் ஆத்திரம் விஏஓ ஆபீசில் தந்தை, தங்கை சரமாரி வெட்டிக் கொலை: விவசாயி கைது appeared first on Dinakaran.