மதுரை :சிறைக்கு வரும் முதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்களை இன்று வழக்கம் போல் விசாரித்து வந்தார். அப்போது, போன மாதம் ஜாமினில் வெளியே சென்றவர்கள் இப்போது கஞ்சா வழக்கில் மீண்டும் கைதாகி ஜாமின் மனு செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர்களுக்கு கடந்த மாதம் ஜாமின் தரப்பட்டது, மீண்டும் கைதாகியுள்ளனர் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
சிறையில் கஞ்சா வழக்கில் கைதானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது என்று காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “சிறை கைதிகளை ஒன்றாக வைக்கும் போது பழைய கைதிகளுடன் இணைந்து தொடர் குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள். சிறு வழக்கில் சிறை செல்வோர் அங்கே உள்ள மொத்த கஞ்சா வியாபாரியிடம் பழகி பெரிய குற்றவாளி ஆகிவிடுகிறார்கள். இதன் காரணமாக கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது. முதல்முறை குற்றவாளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி சிறை அமைக்க வேண்டும்.முதல் குற்றவாளிகளை சிறையில் தனியாக வைப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று சிறைத்துறை ஐஜியிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடுகிறோம்,”இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
The post கடும் குற்றம் புரிந்த விசாரணை கைதிகளுடன் முதல்முறை கைதியை அடைக்க கூடாது : ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.