×
Saravana Stores

கஞ்சா ரெய்டில் சிக்கியதால் விபரீத முடிவு 4வது மாடியிலிருந்து குதித்து பல்கலை மாணவன் தற்கொலை

சென்னை, செப்.5: பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கியதால் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தவர் னிவாச நிகில் (20)‌. இவர், ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்தவர். இவர், பல்கலைக்கழகத்திற்கு வெளியே அதே பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி தாம்பரம் மாநகர காவல் துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் நிகில் தங்கி இருந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிகில் தங்கி இருந்த அறையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார் நிகிலை எச்சரித்து, அறிவுரை கூறிய பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து நிகிலின் பெற்றோரை கல்லூரிக்கு வர சொல்லியதாகவும் இதேபோன்று, காவல் துறை சார்பிலும் மாணவனின் பெற்றோரை வர சென்னதாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்த நிகில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனியார் குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தற்கொலை செய்த மாணவனின் தந்தை தன் மகனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பொத்தேரியில் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கிய மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கஞ்சா ரெய்டில் சிக்கியதால் விபரீத முடிவு 4வது மாடியிலிருந்து குதித்து பல்கலை மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Potheri ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை