×

இலங்கை கடற்படை அராஜகம் நீடிப்பு தஞ்சாவூர் மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை: தஞ்சாவூரை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 160க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில், கோட்டைப்பட்டினம் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் (35), முரளி (32), செல்வம் (40), விஸ்வநாதன் (40) ஆகிய 4 பேரும் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

விசைப்படகு மூழ்கியது: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த சாமந்தன்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் விசைப்படகில் 11 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று காலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் புகுந்ததால்அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உதவி கோரி வாக்கிடாக்கி மூலம் அருகே இருந்த விசைப்படகு மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் விரைந்து வந்து படகை கயிறு மூலம் கட்டி இழுத்து வந்தனர். அதிக அளவு தண்ணீர் புகுந்ததால் படகு மூழ்கியது. அதிலிருந்த 11 மீனவர்களையும் மீட்டு மற்றொரு படகில் ஏற்றினர்.

* மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம்: ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்
அகில இந்திய மீனவர் காங்கிரசின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறைப்பிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது, வலைகளை அறுப்பது போன்ற அத்துமீறல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நட்பு நாடு என்று கூறிக்கொண்டே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்யும் இலங்கை அரசின் இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறும் போக்கினை ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பாஜ அளித்த வாக்குறுதிகள் எதுவுமே 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. மீனவர் நலனில் அக்கறையற்ற ஒன்றிய அரசு உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசை மனிதாபிமானத்துடன் முடிவு எடுக்க வைப்பதுடன், தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற ஒன்றிய அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை அராஜகம் நீடிப்பு தஞ்சாவூர் மீனவர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Sri Lankan Navy ,Pudukottai ,Sri Lanka Navy ,Pudukottai district ,Kottapattinam ,
× RELATED எந்த ஒரு அரசியல் கட்சியும் திமுகவை...