×
Saravana Stores

டிரைவர் கொலையில் மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரி தாக்குதல்: தடுத்த போலீசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு

அருப்புக்கோட்டை: டிரைவர் கொலை விவகாரத்தில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த பெண் டிஎஸ்பியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தடுத்த போலீசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (28). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் சரக்கு வாகனத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே, 2 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென வழிமறித்தனர். இதையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய காளிக்குமாரை, மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிக்குமாரை, திருச்சுழி போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளிக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், காளிக்குமாரின் நண்பர் ஒருவர் பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடன் பெற்று டூவீலர் வாங்கினார். தவணை தொகையை வசூலிக்க நிதி நிறுவன ஊழியர்களான அருண்குமார், லட்சுமணன் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காளிக்குமார், அருண்குமாரை கையில் அரிவாளால் வெட்டியதாகவும் இதில் விரல் துண்டானதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அருண்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து, காளிக்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செம்பொன்நெறிஞ்சியை சேர்ந்த லட்சுமணன் (24), திருச்சுழியை சேர்ந்த அருண்குமார் (22), மதுரையை சேர்ந்த காளீஸ்வரன் (22), பாலமுருகன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிக்குமாரின் உறவினர்கள் நேற்று குவிந்தனர். கொலைக்கு தூண்டுதலாக இருந்த நெல்லிகுளத்தை சேர்ந்த அய்யாவு என்ற வேல்முருகன், வீரசூரன் ஆகியோரை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்தனர்.

பின்னர் திடீரென மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, ‘‘உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். மறியலில் ஈடுபட வேண்டாம். கலைந்து செல்லுங்கள்’’ என கூறினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், ‘‘ நகரின் முக்கிய சாலையான திருச்சுழி ரோடு, பந்தல்குடி சாலை எம்எஸ் கார்னர் பகுதியில் மறியலில் ஈடுபடுவோம்’’ என்று கூறியவாறு ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென டிஎஸ்பி காயத்ரியின் நெஞ்சில் கையை வைத்து தள்ளி தாக்கிவிட்டு முன்னேறி சென்றார்.
இந்த செயலால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி காயத்ரி, அந்த வாலிபரை ஓங்கி அறைந்தார். இதையடுத்து அந்த வாலிபரும், பதிலுக்கு டிஎஸ்பியை தாக்கினார். உடனே போலீசார் அந்த வாலிபரை தாக்கி பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை சுற்றிவளைத்த கும்பலில் ஒருவர், டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்.

இதைக் கண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், டிஎஸ்பி தலைமுடியை பிடித்தவரை அவரது கழுத்தில் கிடந்த துண்டோடு பிடித்து தன் பக்கம் இழுத்தார். உடனே, அந்த நபரை தங்கள் பக்கம் இழுத்த கும்பல், இன்ஸ்பெக்டரையும், தடுக்க முயன்ற போலீசையும் சரமாரியாக தாக்கியது. டிஎஸ்பியையும் சுற்றி வளைத்தது. இந்த பதற்றமான சூழலில் போலீசார், தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து டிஎஸ்பியை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று சென்றனர். 7 பேர் கைது: தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி கண்ணன் நேரில் வந்து டிஎஸ்பி மற்றும் போலீசாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்தும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, டிஎஸ்பியை தாக்கிய நெல்லிக்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (30), அம்மன்பட்டியை சேர்ந்த காளிமுத்து (23), பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த ஜெயராம்குமார், சஞ்சய்குமார், பாலாஜி, ெபான்முருகன் (21), முத்துபட்டியை சேர்ந்த சூர்யா ஆகிய 7 பேரையும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post டிரைவர் கொலையில் மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரி தாக்குதல்: தடுத்த போலீசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : DSP ,Aruppukkottai ,Kalikumar ,Perumaldevanpatti ,Kamudi, Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி திடீர் ஆய்வு