×
Saravana Stores

பள்ளி மாணவிகள் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி பெண் முதல்வர் கைது: சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாணவிகள் பலாத்கார சம்பவத்தில், மேலும் ஒரு பள்ளியின் முதல்வரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. அந்த முகாமில் 8ம் வகுப்பு படிக்க கூடிய 14 வயதுடைய மாணவி நாம் தமிழர் கட்சி நிர்வாகியான போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் 13 மாணவிகள் தொந்தரவுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட மொத்தம் 11 பேர், பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக நலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிவராமன் கிருஷ்ணகிரி அருகே மேலும் ஒரு பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் போலி முகாம் நடத்தி, 14 வயதுடைய 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். புதிய புகார் தொடர்பாக சுதாகர், கமல் என்ற மேலும் 2 பேரை ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பெண் முதல்வரையும், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர். ஜனவரி மாதம் தனியார் பள்ளியில் நடந்த முகாமில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில், சம்பவத்தை மறைத்ததாக பள்ளியின் பெண் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post பள்ளி மாணவிகள் பலாத்கார சம்பவத்தில் மேலும் ஒரு பள்ளி பெண் முதல்வர் கைது: சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Special Investigation Team ,Krishnagiri ,Krishnagiri district ,NCC ,Gandikuppam ,Parkur ,Dinakaran ,
× RELATED சபரிமலை செல்ல மாலை போடும் முன்பு...