×

காரியாபட்டியில் பராமரிப்பின்றி கிடக்கும் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை


காரியாபட்டி: காரியாபட்டி உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வதற்காக முன்னாள் முதல்வர் கலைஞர் 1999ம் ஆண்டு உழவர் சந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் அமோக வரவேற்பை பெற்றது. உழவர் சந்தை திட்டத்தால் விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்தனர். பாமர மக்கள் காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கிச் சென்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு உழவர் சந்தை திட்டம் முழுமையாக செயல்படுத்தாமல் கைவிடப்பட்டது.

அதிமுக அரசு உழவர் சந்தையை மீண்டும் நடத்த எந்தவித அக்கறையும் காட்டவில்லை. காரியாபட்டியில் கடந்த 2009ம் ஆண்டு உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட கடைகள், அலுவலகம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுடன் இயங்கி வந்தது. காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், முஷ்டகுறிச்சி போன்ற ஊர்களில் இருந்து தினமும் விவசாயிகள் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதற்காக அரசு பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. மக்களும் ஆர்வத்துடன் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வராததால் மூடும் நிலை ஏற்பட்டது.

காரியாபட்டி வட்டத்தில் ஆவியூர், முடுக்கன்குளம், மல்லாங்கிணறு உள்ளிட்ட ஊர்களில் வாரம் ஒரு முறை காய்கறி சந்தை இயங்கி வருகிறது. அந்த பகுதி மக்கள் சந்தை சென்று வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறி மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் விளைப் பொருட்களை வாங்கி செல்வது, மதுரை, விருதுநகருக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்வது போன்ற காரணங்களால் உழவர் சந்தைக்கு விவசாயிகள் வருவது முற்றிலும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு காரியாபட்டி உழவர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக கடை திறப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக ஒரு சில விவசாயிகள் வந்து விற்பனை செய்தனர். ஆனால் பொதுமக்கள் யாரும் வராததால் கடைகள் மீண்டும் மூடப்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தும் நோக்கத்தோடு துவங்கப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் தடையில்லாமல் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காரியாபட்டியில் பராமரிப்பின்றி கிடக்கும் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Kariyapatti Farmers' Market ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்