×

கே.வி.குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தையில் தொடர்ந்து வியாபாரம் மந்தம்: விவசாயிகள் வேதனை


கே.வி.குப்பம்: கே.வி.குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தையில் தொடர்ந்து வியாபாரம் மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான் ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் பிரதி வாரம் திங்கட்கிழமை இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. இந்நிலையில், தற்போது கோடை காலம் முடிந்த நிலையில் திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. கடந்த வாரங்களை போலவே சந்தையில், ஆடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது.

காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஆடு வளர்ப்பவர்கள், விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகள் விற்கப்படவில்லை. இதுகுறித்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறுகையில், 20 கிலோ எடை கொண்ட ஆடு ₹12 ஆயிரம் வரைக்கும் விலை போனது. சில ஆடுகள் ₹15 ஆயிரம் வரையும் விலை போனது. ஆடுகளோட எண்ணிக்கையும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்றாலும், போன வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை இரட்டிப்பாகும் என நம்பி வந்தோம். ஆனால் தற்போது கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், அசைவ பிரியர்களும் இறைச்சி வாங்காமல் இருப்பதால், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை வியாபாரிகள் வாங்கவில்லை. ஆதலால் வியாபாரம் கடந்த வாரங்களை போலவே மிகவும் மந்தமாக நடந்தது என்றனர்.

The post கே.வி.குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டு சந்தையில் தொடர்ந்து வியாபாரம் மந்தம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Vellore district ,Attuchanthai district ,
× RELATED ₹2 லட்சம் பைக் கேட்டு மகன் தூக்கிட்டு...