×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சென்னையில் நடத்தப்பட்ட; பார்முலா 4 கார் பந்தயம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கே புதிய பெருமையை தந்துள்ளது: தமிழ்நாடு விளையாட்டு துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சென்னையில் நடத்தப்பட்ட பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமையை தந்துள்ளது என்றும், தமிழ்நாடு விளையாட்டுத் துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இடம் பெற்றுவிட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சென்னையில் உலகையே கவரும் வண்ணம் கடந்த 31ம் தேதி தொடங்கி சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் நடைபெற்று முடிந்துள்ள பார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வலைதளப் பதிவில், “பார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடைய செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமை இந்த பார்முலா 4 கார் பந்தயத்திற்கு கிடைத்துள்ளது. இந்த 3.5 கி.மீ. நீள கார் பந்தய பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன. பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ., தூரத்தை கடந்து தீவுத்திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது. அமைச்சர் உதயநிதி, இந்த போட்டியை நடத்துவதில் தனிக் கவனம் செலுத்தி முறையாக திட்டமிட்டு எந்தவித இடையூறுமின்றி போட்டிகளை வெற்றிகரமாக நடத்திடும் ஆர்வத்துடன், போட்டி நடைபெறும் பகுதியில் இரவிலும், பகலிலும் வருகை தந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

பந்தயத்தையொட்டி தீவுத்திடலை சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என போட்டி நடைபெற்ற சாலை பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு இரவையும் பகலாக்கி பந்தய வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் போட்டிகளை பார்த்து ரசிக்க அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல் உள்ளிட்ட 8 இடங்களில் பார்வையாளர்களுக்கு எனத் தனியே இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங்லீக் அணியாகவும் நடத்தப்பட்டது. பார்முலா எப்4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்டுடெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ், ஷ்ராச்சிராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. ஓர் அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 18 வீரர்கள், 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் வீதம் 16 கார்கள் பயன்படுத்தப்பட்டன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பந்தயத்தின் பயிற்சியை முதல்நாள் சனிக்கிழமையன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் நாளில் வீரர்கள் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (ஞாயிறு) தகுதிச்சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹக்பார்ட்டரே பந்தய தூரத்தை 19:42.952 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்து போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்தியாவின் ருஹான் ஆல்வா பந்தய தூரத்தை 19:50.251 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். மூன்றாவது இடத்தில் பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ் அணியில் அபய் மோகன் 20:09.021 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். பார்முலா 4 இந்தியன் சாம்பியன் ஷிப் போட்டியுடன் இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் ஜே.கே.ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.

பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவுவரை நடைபெற்ற இந்த பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பார்வையாளர்கள் போட்டிகளை ரசித்து ஆரவாரம் செய்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் இந்த கார் பந்தய கொண்டாட்டத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது உரையாற்றுகையில், “சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தயத்திற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தய போட்டியை முதல்வரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு முயற்சி செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திய சென்னை பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுவிட்டது.

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சென்னையில் நடத்தப்பட்ட; பார்முலா 4 கார் பந்தயம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கே புதிய பெருமையை தந்துள்ளது: தமிழ்நாடு விளையாட்டு துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Udayanidhi Stalin ,Formula ,4 ,Tamil Nadu ,South Asia ,Formula 4 car race ,Udhayanidhi Stall ,Formula 4 ,
× RELATED திராவிட மாடலின் அடித்தளமாக திகழும்...