×
Saravana Stores

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: சிபிஐ விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு

திருவனந்தபுரம்: நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரில் இயக்குநர் ரஞ்சித் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் ரஞ்சித் குற்றத்தை மறுத்து, தனது மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார்.

நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் மீது அளித்த புகாரில் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவரும் குற்றத்தை மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் அளித்த புகாரில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்ததால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்திவரும் நிலையில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

The post மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: சிபிஐ விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : KERALA ,ICOURT ,CBI ,Thiruvananthapuram ,Kerala Icourt ,Kerala Court ,
× RELATED சிறுமி வன்கொடுமை வழக்கு.. போலீசாரே விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!!