×

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் மரத்தில் ஓய்வெடுத்த கரடி: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: குன்னூர் அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் கரடி ஓய்வெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அதே சமயம் பெரும்பாலான கிராமப்புறங்கள் வனத்தை ஒட்டியே அமைந்துள்ளன. தற்போதைய கால கட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப வனங்கள் இல்லாததால் இவை கிராமப்புறங்களில் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருவதை காண முடியும்.

மேலும் பல்வேறு தேயிலை தோட்டங்களையும் வாங்கியுள்ள பெரும் செல்வந்தர்கள் அவற்றை சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். இதனால் அவை உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகை புரிகின்றன. இந்நிலையில் பழங்களின் சீசன் உள்ளதால் இந்த பழங்களை உண்ண வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதியில் கரடிகள் வருவது அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குன்னூர் சப்ளை டிப்போ குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மரத்தில் கரடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

The post குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் மரத்தில் ஓய்வெடுத்த கரடி: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்