×

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு: புதியவிதிகள் வகுத்து ஒன்றிய அரசு உத்தரவு


டெல்லி : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகள் வகுத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வீட்டுவசதி மேம்படுத்தவும், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை அளிக்கவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் 2016- 17ம் ஆண்டு ஒன்றிய அரசு செயல்படுத்தியது.

இத்திட்டத்தின்கீழ் வீடு கட்ட ஒன்றிய அரசு சார்பில் ரூ.1.11 லட்சமும், மாநில அரசு சார்பில் ரூ.1.72 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை நடப்பாண்டு முதல் 2028- 29ம் ஆண்டு வரை நாடு முழுதும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகள் விபரத்தை கணக்கெடுக்க, ஊராட்சி செயலரை கணக்கெடுப்பாளராக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது நாடு முழுவதும் 2028ம்- 2029 வரை 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்துமாறு ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் புதிய விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள், தகுதியில்லாதவர்களாக இருந்தால் நீக்க வேண்டும். தகுதி வாய்ந்த புதிய பயனாளிகளை சேர்த்தல் வேண்டும். இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப்-ல் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவருடைய விவரங்களை சேர்க்க வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் தவிர்த்து பிற வாகனங்கள் அதாவது 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்து இருந்தால் பயனாளிகளாக சேர்க்கக்கூடாது. ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில் கிசான் அட்டை வைத்திருப்பவர்கள், குடும்பத்தில் யாராவது அரசு பணியில் இருந்தால், அவர்களை பயனாளிகளாக சேர்க்க முடியாது. அதேபோல, குடும்ப உறுப்பினர் யாராவது மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் வாங்கினால் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக முடியாது.

தொழில் வரி, வருமான வரி செலுத்துபவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்காது. 2.5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, பாசனம் இல்லாத நிலமாக இருந்தால் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் வைத்திருந்தாலோ பயனாளியாக முடியாது. இத்திட்டத்தில் 60 சதவீதம் விழுக்காடு ஒன்றிய அரசு நிதி 40 சதவீதம் விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு: புதியவிதிகள் வகுத்து ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EU Government ,Delhi ,Prime Minister's House ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…....