×

“நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும்” : பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து!!

டெல்லி : நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி :மிலாது நபி திருநாளில் வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : இந்த அருமையான நாள், நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி், இரக்கத்தை கொண்டு வரட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகள்

முதல்வர் மு.க .ஸ்டாலின் : இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துகள். திராவிட மாடல் அரசு இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம் மிலாடி நபி திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும். எனது இதயங்களிந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்; அனைவரிடத்திலும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல்; புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல்” என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

பெருமகனார் நபிகள் நாயகம் பிறந்த நாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மிலாடி நபி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடபாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “உலகெங்கும் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளான மீலாது நாளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனை வணங்கி மகிழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம்; எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்வோம் என சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் நபிகள் (ஸல்) பெருமானார் வற்புறுத்தி அறிவுறுத்தினார்கள். மதுவை ஒழித்திடவும், மதுவிலக்கைக் கட்டாயமாக்கிடவும், அறியாமை இருளைப் போக்கிடவும், சமரசமின்றி உறுதியுடன் வாழ்ந்திடவும் வலியுறுத்தி அரபிகளின் வாழ்க்கையில் மகத்தான மறுமலர்ச்சி கண்ட மாமனிதர்தான் நம் நபிகள் நாயகம்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: “சகோதரத்துவத்தை வலியுறுத்திய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாடி நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் காட்டிய பாதையில் நடக்கும் போது, உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளரும்; அனைத்து நலன்களும், வளங்களும் பெருகும் என்று கூறி மீண்டும் ஒருமுறை மிலாடி நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி: “உண்மையின் வடிவமாக திகழ்ந்த இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார்.

இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.

இந்த பாடத்தை படிப்பது மட்டுமின்றி, அதன்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த உலகமும் அமைதி தவழும் அன்பு இல்லமாக மாறும். அந்த இல்லம் எனும் உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம் நிறைந்ததாக திகழ எனது வாழ்த்துகள்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

The post “நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும்” : பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rahul Gandhi ,PM ,STALIN MILADI PROPHET ,Delhi ,Miladi Nabi Day ,Chief Prophet ,PBUH ,Modi ,Chief Minister MLA ,MLA ,Stalin ,Adimuga General Secretary ,Edappadi Palanisami ,Tamil Nadu Congress Committee ,Sellwapperundagai ,
× RELATED பிரதமர் மோடியின் முதலாளித்துவ...