×

1 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேட்டுப்பாளையம்: நிலச்சரிவு, கன மழை எச்சரிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் இயக்கம் இன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள், மண் சரிந்து விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது.

இதை தொடர்ந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடந்து அன்று முதல் நேற்று வரை மலை ரயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.இந்த நிலையில் நேற்றிரவு தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் விடுத்த செய்திக்குறிப்பில், தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாலும், நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும் 1ம் தேதி (இன்று) முதல் மலை ரயில் சேவை மீண்டும் துவங்கும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த 1 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயிலில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த 180 சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.மண்சரிவு, கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஓடத்துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post 1 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Mautuppalayam ,Matuppalayam ,Ooty ,Neelgiri ,Train ,
× RELATED பராமரிப்பின்றி காணப்படும் சாலையோர மரக்கன்றுகள்