தாம்பரம், செப். 1: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளன. வரும் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வேலை செய்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளிகள் நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்குச் செல்லும் ரயிலுக்காக ஒரே நேரத்தில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு ரயில் வந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.
இதில் ஏராளமானோர் ரயிலில் உள்ள பெண்களுக்கான பெட்டியில் ஏறி அமர்ந்ததால் பெண்கள் கூச்சலிட்டனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்கள் பெட்டிகளில் ஏறி இருந்த ஆண்களை வெளியேற்றி பெண்களை உள்ளே அமர வைத்தனர். ஆனாலும் ரயிலில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. ரயிலில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர். இவ்வாறு விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதல் ரயில்கள் அல்லது கூடுதல் பெட்டிகளை ரயிலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களால் கூச்சல் குழப்பம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.