×
Saravana Stores

ஏலத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட சம்பவம்: ஹைவேவிஸ் வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

சின்னமனூர்: ஏலத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட சம்பவத்தையடுத்து ஹைவேவிஸ் வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. வில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இந்த பேரூராட்சியில் மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தேயிலை, ஏலம், மிளகு, காப்பி முதலிய பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

இந்நிலையில், ஹைவேவிஸ் கிராமத்தில் உள்ள ஓட்டலின் பின்புறம், கம்பத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில், கஞ்சா செடிகள் வளர்ப்பதாக வில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர்கள் தேனி டிஎப்ஓ ஆனந்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டிஎப்ஓ உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது காபி தோட்டத்தின் ஒருபகுதியில், 60க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினர், போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் முருகன், கருப்பசாமி, மணி, மேத்யூ ஜோசப் ஆகியோர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக முருகன், கருப்பசாமி , மணி, கேரளாவை சேர்ந்த மேத்யூ ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், விசாரணை செய்ததில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்த மேத்யூ ஜோசப் என்பவர் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டு வனப்பகுதிகளில் இருக்கும் இடங்களை தேர்வு செய்து கஞ்சா பயிரிட்டு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலோடு இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இவரது அறிவுறுத்தலின் பேரில் கருப்பசாமி,முருகன், மணி ஆகியோர் தோட்டத்தில் கஞ்சா வளர்த்து கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு போகங்களுக்கு மேல் இங்கு கஞ்சா வளர்க்கப்பட்டு அறுவடை செய்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக கஞ்சா வளர்த்து அறுவடை செய்யும் நிலையில் ரகசிய தகவலின்படி வனத்துறை புகாரில் போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீஸ் குழுவை துரத்திய யானை;
கடந்த 28ம் தேதி சின்னமனூர் எஸ்ஐ தலைமையிலான குழுவினர் கஞ்சா செடிகளை அழிக்க மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். ஹைவேவிஸ் அணையிலிருந்து 7 கிமீ தொலைவில் இருந்த குழிக்காடு என்ற இடத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை வெட்டி தீ வைத்து எரித்தனர். அதன் பின்பு திரும்பி வரும் போது ஒற்றை யானை போலீஸ் குழுவை துரத்தியது. சுதாரித்துகொண்ட போலீசார் வனப்பகுதியில் இருந்து ஹைவேவிஸ் அணைப்பகுதிக்குள் சென்று தப்பினர். அணையை சுற்றி வேலி அமைக்கப்பட்டிருப்பதால் யானை சென்றுள்ளது.

கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை;
ஓடைப்பட்டி பேரூராட்சி எல்லையில் உள்ள தென் பழனிமலை அடிவாரத்தில் சின்னமனூர் வனத்துறையின் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து வனத்துறையினர் அனுப்பப்படும் தென்பழனி மலையடிவாரத்தில் இரவில் யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் கஞ்சா வளர்க்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஏலத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட சம்பவம்: ஹைவேவிஸ் வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ganja ,Highways Forest ,Chinnamanur ,Highways ,Western Ghats ,Chinnamanur, Theni district ,Meghamalai Tiger Reserve… ,Ganja Cultivation Incident ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் உள்ள கைதிகளை...