×

கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை பங்கேற்பாரா?: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவரை பிரிந்து வாழும் அவரது தந்தை கமலாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பாரா என்று பரபரப்பான கேள்வி அந்த நாட்டின் தேர்தல் களத்தில் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் களத்தில் நிற்கிறார். போட்டியில் இருந்து அதிபர் ஜோ பைடன், உடல்நல குறைவால் விலகி கொண்ட நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜனநாயக கட்சியின் மாநாட்டில் அவரது தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸ் பங்கேற்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த தேர்தலுக்கு பின் வெள்ளை மாளிகையில் துணை அதிபராக கமலா பதவியேற்ற விழாவிலும் அவரது தந்தை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் வெள்ளை மாளிகை அருகிலேயே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் குடியிருக்கும் டொனால்ட் ஜே ஹாரிஸ் ஒருமுறை கூட கமலாவை வந்து சந்திக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. கமலா ஹாரிஸின் அம்மா சியாமளா கோபாலன் இந்தியாவை சேர்ந்தவர்.

அவர் தாய்வழி மூதாதையர் வாழ்ந்தது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் துளசியேந்திர புரமாகும். புற்றுநோய் ஆரய்ச்சியாளரான சியாமளா கோபாலன் 19 வயதில் அமெரிக்கா சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸை மணந்து கொண்டார். ஆனால், இரு குழந்தைகள் பெற்ற பின் கருத்து வேறுபாடு காரணமாக கமலாவின் 7 வயதில் அவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். எனவே தந்தையுடன் தொடர்பின்றி தாயின் அரவணைப்பில் வளந்துள்ளார் கமலா. அவரது அம்மா சியாமளா கோபாலன் தனது 76 வயதில் உடல்நல குறைவால் காலமான பின் தற்போது தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸ் மட்டுமே உள்ளார்.

ஆனால் டொனால்ட் ஜே ஹாரிஸ் மார்க்சிஸ் சிந்தனை கொண்டவர் என்பதால் கமலா ஹாரிஸின் கொள்கைகளை விமர்சித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தான் வேட்பாளராக தேர்தெடுக்கப்பட்ட மாநாட்டில் உரையாற்றிய கமலா ஹாரிஸ் தனது தந்தையே தனக்கு பயமின்மையை கற்று கொடுத்ததாக கூறியிருந்தார். எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் பதவி ஏற்பு விழாவில் அவரது தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸ் பங்கேற்பாரா என்று அமெரிக்க தேர்தல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

The post கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை பங்கேற்பாரா?: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kamala Harris ,US ,Washington ,president ,United States ,Kamala ,US presidential election ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம்