×

திருவாலி – திருநகரி வயலாளி மணவாளன்

‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதுபோல ஒரே திவ்ய தேசக் கணக்கில் நாம் இரண்டு கோயில்களைத் தரிசிப்பதற்கு வாய்ப்பாக பகவான் அருளியிருக்கும் தலங்கள்தான் திருவாலியும், திருநகரியும். ஒரே திவ்ய தேசமாகக் கருதப்பட்டாலும், இரண்டு கோயில்களுக்கும் இடைப்பட்ட தொலைவு 5 கிலோமீட்டர் என்ற பயண உண்மை, அலைச்சலைத் தந்தாலும் இரண்டு கோயில்களும் ஒரே திவ்யதேசமே என்ற டூ-இன்-ஒன் பலன், சந்தோஷத்தையே தருகிறது. முதலில் திருவாலிக்குப் போய் அங்கே உறையும் வயலாலி மணவாளனை தரிசிக்கலாம். லக்ஷ்மி நரசிம்மர் என்றும் அழைக்கப்படும் இந்தப் பெருமாள், வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். இந்தத் திருவாலி, திருமங்கையாழ்வார் ஒரு சிற்றரசனாக கோலோச்சிய தலம். ஆனால், திருநகரிக்கு அடுத்துள்ள குறையலூர்தான் அவர் அவதரித்த ஊர். ஒரு காலத்தில் இப்பகுதி ஆலிநாடு என்றழைக்கப்பட்டது.

‘ஆலி நகர்க்கு அதிபதி’ என்று குலசேகர ஆழ்வாரும், ‘அம்தண் ஆலி மால்’ என்று திருமங்கையாழ்வாரும் போற்றிப் பாடி, பரவசப்பட்ட அழகுத் தலம், திருவாலி. ஆலிநாட்டின் மன்னனாகத் திகழ்ந்ததாலேயே திருமங்கையாழ்வார் ‘ஆலி நாடான்’ என்றும் அழைக்கப்பட்டார். பரந்தாமனின் தசாவதாரங்களிலேயே நரசிம்ம அவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் திருமங்கையாழ்வார். அதனால்தான் திருவாலியில் கோயில் கொண்டிருக்கும் வயலாலி மணவாளனாய் எழுந்தருளியிருக்கும் லட்சுமி நரசிம்மரை அவர் பெரிதும் போற்றி வழிபட்டிருக்கிறார். மொத்தம் 86 திவ்ய தேசங்களை (வடநாட்டில் 13, மலை நாட்டில் (கேரளம்) 4 உட்பட) தரிசித்து இவர் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்றால், அதற்கெல்லாம் அந்த நரசிம்மனே துணையிருந்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

இரண்யனை வதம் செய்த பிறகும், தன் பக்தனான பிரஹலாதனை அத்தனை வருத்திய இரண்யன் மீதான கோபம் நரசிம்மருக்குக் கொஞ்சமும் குறையவேயில்லை. அரக்கனை அழித்தது சரி, அவர் தன் சினத்தை அழிக்காவிட்டால், சீரழிந்துவிடுமே இந்தப் பிரபஞ்சம்! பிரம்மன் முதலான கடவுளர்கள் அச்சத்தினால் உடல் நடுங்கினார்கள். உடனே மஹாலக்ஷ்மியிடம் தஞ்சமடைந்தார்கள். அன்னையின் அன்பும், அரவணைப்புமே ஐயனின் கோபத்தை ஆற்றும் மாமருந்து என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். பிரபஞ்சம் தழைக்க, பகவானின் சீற்றம் தணிக்கப்படவேண்டும் என்பதை உணர்ந்த மஹாலக்ஷ்மி, ஓடோடிச் சென்று நரசிம்மரின் வலது மடிமீது அமர்ந்து இரு கரம் கூப்பி, கண்களில் நீர் மல்க அவர் சாந்தமடையவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அந்தக் கண்ணீரில், கை கூப்பலில் உலக க்ஷேமம் தெரிந்தது. உடனே சாந்தமானார் நரசிம்மர்.

கருணை வடிவாய் வந்த அன்னையைத் தன் கரத்தால் மென்மையாக அரவணைத்துக் கொண்டார். உலகமனைத்துக்கும் பாச அருள் வழங்கினார். இதே ஆலிங்கன தோற்றத்தில் இந்த தலத்திலும் நரசிம்மர் காட்சி கொடுத்ததால், இதற்கு திருவாலி என்று பெயர் அமைந்தது. திருமங்கயாழ்வாரை பொறுத்தவரை, இந்தக் கலியுகத்தில்தான் இவருக்கு பரந்தாமன் மீது பற்று என்றில்லை, இதற்கு முந்தைய மூன்று யுகங்களிலும் இவர் மஹாவிஷ்ணுவின் பக்தனாகவே திகழ்ந்திருக்கிறார். இந்த பக்திப் பற்றுக் காரணமாகவே இந்த யுகத்தில் இந்தத் திருவாலி-திருநகரியில் வாழும் பேறும் பெற்றிருக்கிறார் இவர். சரி, முந்தைய யுகங்களில் இவரது பக்தி எப்படிப்பட்டதாயிருந்தது?

கிருத யுகத்தில் பிரம்மனின் மகனாக, கர்த்தம பிரஜாபதி என்ற பெயருடன் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். மனம் முழுவதும் பக்தி உணர்வே சூழ்ந்திருக்க, எதிலும், சிறிதும் பற்றில்லாதவராக, ஆனால், பரந்தாமனின் கருணையால் முக்தி பெறும் பற்றை மட்டும் விடமுடியாதவராக அந்த நோக்கத்திலேயே கடுந்தவம் இயற்றினார். ஆனால் பரம மூர்த்தியோ பாராமுகமாக இருந்தார். இதுகண்டு மஹாலக்ஷ்மி திகைத்தாள். தன் பெயரை உச்சரித்தாலேயே ஓடோடி வந்து காக்கும் நாராயணன் கர்த்தம பிரஜாபதியின் கோரிக்கையை செவி மடுக்காமல் இருக்கிறாரே என்று ஆதங்கமும் பட்டாள். நற்கருணை வழங்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள். ஆனால் மாயவனோ, ‘அவன் முக்திப் பேறு அடையும் காலம் இன்னும் வரவில்லை,’ என்று பதிலளித்தார்.

இவர் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கிறார் என்று கோபப்பட்ட திருமகள் ஊடல் கொண்டு, விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு வந்தாள். தன்னைத் தேடி நாராயணன் வருவான் என்பது தெரிந்தும், தன் சிபாரிசை ஏற்க விரும்பாத அவர் கொஞ்சம் தேடித்தான் சிரமப்படட்டுமே என்று நினைத்தாள் போலிருக்கிறது, திருவாலி என்ற இப்போதைய இந்தத் தலமான வில்வாரண்ய காட்டில், தாமரைகள் பூத்த தடாகத்தில் ஒரு தாமரை மொட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டாள். அவள் மறைந்துவிட்டதால் சூன்யமாகிவிட்ட வைகுந்தத் திலிருந்து அவள் எதிர்பார்த்தபடியே பரந்தாமன் அவளைத் தேடி பூவுலகிற்கு வந்தார். பல இடங்களில் தேடுவது போல பாவனை செய்த அவர், மிகச்சரியாக வில்வாரண்யத்துக்கு வந்தார். தாமரைப் பொய்கையில் தாமரை மொட்டுகள் அவரைப் பார்த்து மெல்லத் தலையசைத்தன.

அது இரவு கவியும் நேரமாதலால், மலர்களும் கூம்பி மொட்டுகளாகவே மாறியிருந்தன. இந்த மொட்டுகளில் ஒன்றில்தான் தன் நாயகி ஒளிந்திருக்கிறாள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது?மெல்ல சிரித்துக்கொண்ட மாதவன், தன் வலக்கண் பார்வையை அந்த மொட்டுகள் மீது பரப்பினார். சூரியனும், சந்திரனும் தானே அவரது இரு கண்கள்! சூரியனின் கிரணங்கள் பட்டால் தாமரை மலரத்தானே வேண்டும்? அவர் எதிர்பார்த்தாற்போல எல்லா மொட்டுகளும் இதழ் அவிழ்க்க, அவற்றில் ஒன்றிலிருந்த திருமகள், தன்னை அவர் கண்டுபிடித்துவிட்ட தோல்வியே நாணமாக மாற, தயங்கியபடியே எழுந்தாள். பகவான் அவளை மெல்ல அணைத்துக்கொண்டார். இப்படி திருமால் தாயாரைத் தழுவி ஏற்றுக்கொண்டதாலும் இந்தத் தலம் திருவாலி என்று பெயர் பெற்றதாகச் சொல்வார்கள்.

இவ்விருவரையும் இந்தக் கோலத்தில் கண்டு மகிழ்ந்த கர்த்தம பிரஜாபதி, தன் தவ நோக்கத்தை இறைவனிடமே சமர்ப்பித்தான். ஆனால் மஹாவிஷ்ணுவோ, ‘உனக்கு இந்த யுகத்தில் அந்தப் பேறு கிடைக்க விதியில்லை’ என்று கூறிவிட்டார். அதை அப்படியே சிரமேற்கொண்டு பொறுமை காத்தான் கர்த்தம பிரஜாபதி. அடுத்ததான திரேதா யுகத்தில் அவன் உபரிசரவசு என்ற பெயரில் புது உடல் கொண்டான். இந்தப் பிறவியில் அவன் பெரும் மன்னனாகத் திகழ்ந்தான். தேவர்களுக்கே உதவி புரியும் பெருந்தகையாக விளங்கினான். இவனுக்கு ஓர் ஆற்றல் இருந்தது. அது, வானில் பறந்து செல்லும் சக்திதான். அவ்வாறு ஒருசமயம் அவன் பறந்து சென்றபோது திருநகரி தலத்தை அவனால் கடந்து செல்ல இயலவில்லை.

தன்னைத் தடுக்கும் தடை எது என்று சற்றே திகைத்துக் குழம்பினான். இந்தத் தலத்தில் ஏதோ தெய்வாதீனம் சாந்நித்தியம் கொண்டிருக்கிறது என்று ஊகித்தான். அதை அறிந்துகொள்ள பேராவல் கொண்டான். உடனே கீழிறங்கி நெடிய தவத்தில் ஆழ்ந்தான். ஆமாம், அந்த தெய்வீகச் சூழலுக்குப் பெருமாள் என்ற பேரருளாளனே மூல காரணம் என்பதைக் கண்டுகொண்டான். அதை ஆமோதிப்பதுபோல திருமால் அவன் முன் திவ்ய தரிசனம் தந்தார். உடனே தன் முற்பிறவி ஏக்கம் முன்னே வந்து நிற்க, ‘ஐயனே, எனக்கு இப்பிறவியில் மோட்சம் கிட்டுமா?’ என்று கேட்டான். புருஷோத்தமன் புன்னகைத்தார். ‘இன்னும் உனக்கு அதற்கான வேளை வரவில்லை; இந்த யுகத்தில் அது உனக்குக் கிட்டாது,’ என்று அவனது ஏக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்போல பதிலளித்தார். அமைதியாக அந்த பதிலை ஏற்றுக்கொண்ட உபரிசரவசு, இறைவன் திருவுளப்படியே எல்லாம் நடக்கட்டும் என்று பொறுமை காத்தான்.

அடுத்த துவாபர யுகத்தில் அவன் சங்கபாலனாக இன்னொரு உடல் கொண்டான். ககூஸ்த பட்டினம் என்ற நாட்டின் மன்னனான வஜ்ர கோஷனுக்கு அமைச்சனாக சங்கபாலன் பணியாற்றினாலும், அவன் மனம் இறைத்தொண்டிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தது. தன் மகனிடம் அமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவன் புனித யாத்திரை மேற்கொண்டான். அப்படி வரும்வழியில் இப்போதைய திருநகரியான வில்வாரண்யத்திற்கு வந்தான். அங்கே மிகப் பெரிய யாகத்தை இயற்றினான். யாக முடிவில் அவன் பெரிதும் மகிழும் வண்ணம் திருமாலே அவன்முன் தோன்றி, அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்டார். இந்த யுகத்திலும் மஹாவிஷ்ணுவை தரிசித்த அவன், தனக்கு மோட்ச பதவி நல்குமாறு மீண்டும் வேண்டினான். மீண்டும் அதே மோகனப் புன்னகை.

‘‘இந்த யுகத்திலும் நீ அந்தப் பதவிக்கு உன்னைத் தகுதியாக்கிக்கொள்ளவில்லை,’’ என்றே பதிலளித்தார் பெருமாள். ‘‘அப்படியானால் எனக்கு நீங்கள் நேரடி தரிசனம் தந்ததெல்லாம் என்மீது தாங்கள் கொண்ட அபிமானத்தால் இல்லையா? இப்படி ஒரு யுகத்துக்கு ஒருமுறை திவ்ய தரிசனம் தரும் தங்களை நிரந்தரமாக என்றென்றும் தரிசித்துக்கொண்டே இருப்ப தாகிய மோட்சப் பதவியை நான் பெற என்னதான் செய்யவேண்டும் ஐயனே?’’ என்று கேட்டான் சங்கபாலன். ‘‘அடுத்த யுகம் உனக்காகக் காத்திருக்கிறது. ஆமாம், கலியுகத்தில் நான் உனக்கு அந்தப் பதவியை அளிக்கப் போகிறேன்,’’ என்று நிறைவாகச் சொன்னார் நாராயணன். மீண்டும் பொறுமை காத்தான் சங்கபாலன். கலியுகம் வந்தது.

நீலன் என்ற சிற்றரசனாக உருவெடுத்தான் அவன். குமுதவல்லி என்றப் பேரழகுப் பெண்ணின் மன சந்தோஷத்துக்காக தன்னை வைணவனாக மாற்றிக்கொண்டான். ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம் அளித்தான். அதற்கு பொருளாதாரத் தட்டுப்பாடு வந்தபோது வழிப்பறி செய்யவும் தயங்கவில்லை அவன். ஆனால் முந்தைய யுகங்களில் மஹாவிஷ்ணு அவனுக்கு நேரடி தரிசனம் தந்தபோது ஏற்பட்ட கிளர்ச்சியைவிட இந்த யுகத்தில் மணவாளனாக வந்த அவரது பாதம் பற்றி, அந்த விரலிலிருந்த மெட்டியைப் பறிக்க அதை பற்களால் கடித்தபோது ஏற்பட்ட பரவசத் தாக்குதல் வித்தியாசமானது. அப்போதே திருமால் மீது பாசுரம் பாடி, தன்னை மோட்சப் பதவிக்குத் தகுதியானவனாக்கிக்கொண்டான்.

பரந்தாமனின் தகுதி மதிப்பீடு இங்கே சிறப்பாக கவனிக்கத்தக்கது. தன்னை நாடுபவன், மோட்ச பதவி வேண்டுபவன், அதாவது என்றென்றும் தன் சேவையிலேயே ஆன்மாவை முற்றிலுமாக ஈடுபடுத்த விரும்புபவன், மிகவும் தாழ்நிலை தொண்டனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார்! பிரம்மனின் மகனாகவே இருந்தாலும், மாபெரும் மன்னனாக இருந்தாலும், ஓர் நல் அமைச்சனாக இருந்தாலும் தன்னை அடைய வேண்டும், மோட்ச பதவியைக் கைக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் கொஞ்சம் கர்வம் தொனிக்கத்தான் செய்தது. தனக்கு நேரே தரிசனம் கொடுக்கும் திருமால், அந்த அளவுக்குத் தன்மீது அக்கறை கொண்டுள்ள திருமால், தன் மோட்ச பதவி கோரிக்கையை நிறைவேற்றாமலா போய் விடுவார் என்ற ஆணவம் மிகுந்த எதிர்பார்ப்பாகத்தான் அது இருந்தது.

ஆனால் வைணவத்தில் பரிபூரண நம்பிக்கை கொண்டு, வைணவ அடியார்களுக்கு அன்னதானம் அளிக்க எந்த நிலைக்கும் தன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தயாராக இருக்கும் எளிய தொண்டனாக இறங்கி வந்தால், அவரது பரிபூரண அன்புக்குப் பாத்திரமாகலாம்!நான்கு யுகங்களாக மோட்சப் பதவிக்காக ஏங்கியிருந்த திருமங்கை யாழ்வார், இந்தக் கலியுகத்தில் நாராயணன் கோயில்கொண்டிருக்கும் தலங் களுக்குச் சென்று அந்தந்தத் தலத்தை தரிசித்த தான் மட்டும் மகிழாமல், திருமால் மேல் பக்தி பூண்ட அனைவருமே மகிழத்தக்க வகையில் பாடல்கள் இயற்றிப் பரவசமடைந்திருக்கிறார். இப்படி நான்கு யுகத் தொடர்பு இருந்ததால்தான் இவரால் இத்தனை திவ்ய தேசங்களை தரிசித்து மங்களாசாசனம் செய்ய முடிந்திருக்கிறது என்றே சொல்லலாம்!சரி, இனி திருவாலி திவ்ய தேசத்தை தரிசிக்கலாம். வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய் திருவே! என் ஆருயிரே!
அம்தளிர் அணிஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரையும்
திருவாலி அம்மானே என்று நெகிழ்ந்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முன்மண்டபம் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. காரணம், இங்குதான் ரங்கநாதர் திருமண வைபவம் நடைபெறுகிறது. உள்ளே லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாக விளங்குகிறார். அவரது வலது மடிமீது, உலகம் உய்யும் பொருட்டு அவர் தம் சினத்தை விலக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பாவனையில் அமர்ந்திருக்கிறாள் தாயார். கருவறை சந்நதிக்குள் வெள்ளியாலான ஒரு குடை ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உற்சவ காலங்களில் இந்த நரசிம்மப் பெருமாளுக்கு நிழல் தந்து அவர் மறுபடி கோபம் கொள்ளாத சூழலை உருவாக்குகிறது இந்தக் குடை. உற்சவர், திருவாலி நகராளன் என்று போற்றப்படுகிறார். இந்தத் திருவாலி, திருமங்கையாழ்வாரின் மனைவியாகிய குமுதவல்லி வளர்ந்த தலம். இந்த தலத்தைச் சுற்றிலும் நான்கு நரசிம்ம தலங்கள் உள்ளன. இவற்றை மொத்தமாக பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் என்று சொல்கிறார்கள். குறையலூர் என்ற இடத்தில் உக்கிர நரசிம்மர், மங்கை மடம் தலத்தில் வீர நரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் என்று மொத்தத்தில் ஐந்து நரசிம்மர்கள் இந்தப் பகுதியை செம்மைபடுத்துகிறார்கள்.

திருமங்கையாழ்வார் இந்த திருவாலி நரசிம்மரை, திருவாலியம்மான் என்றும் அணியாலியம்மான் என்றும் அழைத்து மகிழ்கிறார். திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்டதானவேத ராஜபுரத்தில்தான் திருமங்கயாழ் வாரான நீலன், மணமகனான பெருமாளை வழிமறித்துக் கொள்ளையில் ஈடுபட்டார். இதை ஒரு விழாவாகவே ஒவ்வொரு ஆண்டும் வேத ராஜபுரத்தில், பங்குனி உத்திர முதல் நாளன்று நிகழ்த்துகிறார்கள். இதற்கென்றே வேடுபறி மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவிலுள்ள பத்ரிகாச்ரமம் (பத்ரிநாத்) தலத்திற்கு அடுத்தபடியாக இந்தத் திருவாலி தலத்தில்தான் பரமாத்மா தானே அஷ்டாக்ஷர மந்திரம் உபதேசித்திருக்கிறார். பத்ரிநாத்தில் பரந்தாமன் ஓர் ஆசார்யனாகத் தன்னைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார்; தனது இடது கையை யோக முத்திரையாகக் கொண்டு, ஒரு தபஸ்வியாக, இலந்தை மரத்தடியில் பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். திருவாலியில் நீலன் என்ற திருமங்கையாழ்வாருக்கு அந்த எட்டெழுத்து மந்திரத்தைத் தானே நேரடியாக ஓதியிருக்கிறார்.

இந்தவகையில் பத்ரிநாத்தும் திருவாலியும் ஒன்று என்றே சொல்லலாம். அடுத்து, திருநகரி செல்வோம்.ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை கம்பீரமாக வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால் தேர் மண்டபம், துவஜஸ்தம்பம், இரண்டாவது கோபுரம் என்று அடுத்தடுத்துக் கடந்து செல்லலாம். மூலவரான வயலாலி மணவாளன் என்ற வேதராஜனை தரிசிக்க பதினொரு படிகளை ஏறிச் செல்லவேண்டும். வண்ணமயமான அழகிய மூலவர். இவர் சுதையால் உருவான அர்ச்சாவதாரம் என்பதால் இவருக்குத் திருமஞ்சனம் நிகழ்த்துவதில்லை. இவருக்கு இடது பக்கம் திருமங்கையாழ்வார் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார்.

அருகில் குமுதவல்லி பெருமை கலந்த நாணத்துடன் நின்றிருக்க, ஆழ்வார் கையில் ஒரு வேலுடன் திவ்ய தரிசனம் தருகிறார். இவருக்கு இந்த வேல் எப்படிக் கிடைத்தது? இவர், காழிச்சீராம விண்ணகரம் என்ற தலத்தில் சைவத் திருதோன்றலான திருஞான சம்பந்தரை வாதத்தில் தோற்கடித்ததால், இவரைப் பாராட்டும் வகையில் திருஞான சம்பந்தர் கொடுத்த வேல் இது என்கிறார்கள். அவர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரல்ல; சம்பந்தர் என்ற பெயர் கொண்ட ஒரு வித்வான் என்றும் சிலர் சொல்கிறார்கள். திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய பிரபந்தங்களை அருளிச்செய்த திருமங்கையாழ்வார், பரகாலன், கலியன், நாலுகவிப் பெருமாள், அருள்மாரி என்றெல்லாமும் அழைக்கப்பட்டவர். தன் சிந்தனைக்கினியவனாக இந்தப் பெருமாளைப் பாடி மகிழ்ந்திருக்கிறார் திருமங்கையாழ்வார்:

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய், திருவே, என் ஆருயிரே,
அம்தளிர் அணிஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரையும்
திருவாலி அம்மானே

திருமங்கையாழ்வார்பூஜித்த சிந்தனைக்கினியான் திருவிக்ரகம் பேரருள் புரிகிறது. ராமானுஜர் காலத்தில், அவரால் திருக்குறுங் குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு திருநகரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருக்கிறது. சிந்தனைக்கினியானின் தினசரி பூஜைக்காக மலர்கள், அருகிலேயே ஒரு நந்தவனத்திலிருந்து பெறப்படுகின்றன. ராமானுஜர் வாழ்ந்த நாட்களிலிருந்தே இப்படி மலர்களை அள்ளித் தந்த அந்த நந்தவனம், இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது; புராதனப் பெருமையை இன்றும் நிலைநாட்டும் சாட்சியாக விளங்குகிறது. திருமங்கையாழ்வார் மோட்சம் ஏகுமுன் திருக்குறுங்குடியில் வாழ்ந்துவந்தார். அப்போது தன்னைப் போலவே தங்கத்தாலான ஒரு விக்ரகத்தை அவர் உருவாக்கினார். சற்றுத் தொலைவில் அதை நிறுத்திவிட்டு, ‘வா’ என்று அதனை அழைத்தார்.

பார்த்தோர் வியக்கும் வண்ணம் அந்த விக்ரகம் அவரை நோக்கி நடந்து வந்தது. அதை அப்படியே ஆரத் தழுவிய திருமங்கையாழ்வார், அந்தத் தழுவலிலேயே தன் யோக சக்தி அனைத்தையும் அதனுள் ஆவாகனம் செய்தார். அதாவது அந்த விக்ரகமும், தானும் வேறல்ல என்ற நிலையை அவர் உருவாக்கினார். அதன்பிறகு அவர் வைகுந்தம் ஏகினார். இந்தச் சிலைதான் இப்போது திருநகரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இச்சிலைக்கு, அதாவது திருமங்கையாழ்வாருக்கு நித்ய பூஜைகளும், அலங்காரங்களும் பக்தர்கள் மனம் மகிழ நிறைவேற்றப்படுகின்றன. நம்மாழ்வார் அவதரித்த திருத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்படுவதுபோல, திருமங்கையாழ்வார் அவதரித்த இந்தத் தலம் திருவாலி, திருநகரி என்றாயிற்று. இன்னொரு சந்நதியில் கல்யாண ரங்கநாதரை தரிசிக்கலாம். திருமணக் கோலத்தில், அமர்ந்த நிலையில் இவர் சேவை சாதிக்கிறார்.

இவரை உளமாற வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி திருமணப் பேறு எளிதாகக் கிட்டுகிறது.ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதருக்குக் கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை என்றும், இங்கே, திருநகரியில் அந்த வைபவத்தை நிகழ்த்துவதாகவும் சொல்கிறார்கள் வைராலி மண்டபத்தில் ஸ்ரீ தேவி-பூதேவி சமேதராக சந்தான கிருஷ்ணன் திருக்கோலம் காட்டுகிறார். புத்திர பாக்கியம் இல்லாதோர் இந்த சந்தான கிருஷ்ணனை வழிபட்டு அந்த அரிய பேற்றை பெருகிறார்கள். பிராகாரத்தைச் சுற்றி வந்தபோது சில பக்தர்கள் மேலே அண்ணாந்து பார்த்தபடி, இரு கரம் கூப்பித் தொழுதுகொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்கள்தரிசித்துக்கொண்டிருந்தது, ஹிரண்ய நரசிம்மரை. ஹிரண்யனை வதம் செய்துகொண்டிருக்கும் கோலம். ஆழ்வார் மண்டபத்தின் விமானத்தில், வடதிசை நோக்கி பார்த்தபடி அமைந்திருக்கிறது இந்த அர்ச்சாவதாரம்.

ஆழ்வார் மண்டபத்தின் வெளியே சுவரை ஒட்டியுள்ள ஏணிப்படிகள் வழியாக பட்டர் மேலேறி இந்த நரசிம்மருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்கிறார். அவர் ஒருவர் நின்றுகொள்ள மட்டுமே அங்கே இடம் என்பதால், பக்தர்கள் தாமும் மேலேறி வந்து அவரை நேரடியாக தரிசிக்க அனுமதியில்லை; வசதியுமில்லை. ஆகவே அவர்கள் கீழே நின்றபடியே அந்த வழிபாடுகளைக் கண்டு களிக்கிறார்கள். இந்த விமானத்துக்குக் கீழே விளங்கும் ஆழ்வார் மண்டபத்தில் பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீ தேவி&பூதேவி சமேத பரமபதநாதர், லட்சுமிநாராயணன், கலிபுரீஸ்வரர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், பிள்ளை லோகாச்சார்யார் என்று ஒவ்வொருவரும் தனித்தனி சிலையாக கொலுவிருந்து ஆசியளிக்கிறார்கள்.

யோக நரசிம்மப் பெருமாள் தனி சந்நதியில் இலங்குகிறார். இந்த இரு நரசிம்மர்களையும் தினமும் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார் திருமங்கையாழ்வார். இவர் மூலவர் வேதராஜனுக்குப் பின்னால் அருள்பொங்கத் திகழ்கிறார். இந்த நரசிம்மருக்கு எதிரே வரிசையாக நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். யோக நரசிம்மர் பிரார்த்தனை தெய்வமாகப் போற்றப்படுகிறார். திருநகரியில் எட்டு தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் சொல்கிறது. அவற்றில் எட்டாவதாகச் சொல்லப்படும் ஆஹ்லாத புஷ்கரணி, வடநாட்டு கங்கை நதியேதான். மகாபாரதப் புராணப்படி, மன்னன் சந்தனுவை மணந்துகொண்ட கங்காதேவி, தன்னை எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதிக்கிறாள். திருமணத்திற்குப் பிறகு தங்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் ஆற்று வெள்ளத்தில் வீசிக் கொல்கிறாள் கங்காதேவி. அதுவரை அவள் மீது கொண்ட மோகத்தால் கேள்வி கேட்கத் துணிவின்றி இருந்த சந்தனு, எட்டாவது குழந்தையை அவள் அவ்வாறு கொல்லப்போனபோது தடுத்து நிறுத்துகிறான்.

அப்போதே அவனை விட்டு அவள் மறைந்துவிடுகிராள். அந்த எட்டாவது குழந்தைதான் பீஷ்மர். தான் இவ்வாறு தன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க கங்காதேவி திருநகரிக்கு வந்து எம்பெருமானை மனம் அழ வேண்டிக்கொள்கிறாள். அவர் அவளுக்கு விமோசனம் அருளும் வகையில் அந்தத் தலத்திலேயே ஒரு தீர்த்தமாகத் திகழச் செய்கிறார். அந்த தீர்த்தமே ஆஹ்லாத புஷ்கரணி. குலசேகர ஆழ்வார், இந்தப் பெருமாளை கிருஷ்ணனாகவும், ராமனாகவும் பாவித்து பேரானந்தம் அடைந்திருக்கிறார்: ஆலின் இலைப் பாலகனாய், அன்று உலகம் உண்டவனே, வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே ஆலிநகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ ஏதேனும் ஒரு பெருமாளை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கிறார்கள் என்றால்,

கூடுதல் தகவல்களாகவும், புராண சம்பவப் பெருமைகளைப் பேசுவதாகவும் அவை அமைந்துவிடுவது, அந்தப் பாசுரங்களுக்குத் தனிச்சுவையை அளிக்கின்றன. அதுபோலதான் இந்தப் பாடலிலும், ‘பிரளயம் வந்தபோது ஆலிலை மீது அமர்ந்து அழகுக் கோலம் காட்டியவனே, ஒரு குழந்தையாக மண்ணை உண்டு, அந்தத் திருவாய்க்குள் அண்டசராசரங்களையும் காட்டியவனே, வாலியை வதம் செய்து கிஷ்கிந்தை ராஜ்யத்தை அவன் தம்பியான சுக்ரீவனுக்கு வழங்கியவனே, நீர்நிலைகளின் உள்ளிருக்கும் மணிகளை எடுத்து வெளியே வீசும் அளவுக்கு காற்றடிக்கும் தலமான திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டவனே, என் கண்ணின் மணி போன்றவனே, திருவாலி நகரின் நாயகனே, அயோத்தி மாமன்னனே, கண் உறங்காய்,’ என்று வியந்து போற்றுகிறார் குலசேகர ஆழ்வார்.

எப்படிப் போவது: திருவாலி, சீர்காழி – திருவெண்காடு பாதையில் உள்ளது. கீழச்சாலையிலிருந்து 2 கி.மீ. திருநகரி, சீர்காழி பெருந்தோட்டம் பேருந்து பாதையில் உள்ளது. ஆட்டோ அல்லது வாடகைக் காரில் செல்லலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: திருவாலி, காலை 9 முதல் 11 மணிவரை (ஒருகால பூஜைக்காக மட்டும்) (சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 6 மணிவரை); திருநகரி காலை 7 முதல் 11 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 8.30 மணிவரையிலும்.
முகவரி: திருவாலி, அருள்மிகு லட்சுமி நரசிங்கப் பெருமாள் திருக்கோயில், திருவாலி, சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.திருநகரி, அருள்மிகு உக்ர நரசிம்மப் பெருமாள் சந்நதி, திருக்குறையலூர், மங்கைமடம் வழி, திருவெண்காடு அருகில், சீர்காழி தாலுகா, நாகை மாவட்டம் – 609114.
தியான ஸ்லோகம்
ஸ்ரீ மத் யாலி புரே புரா ஹரி ரஸௌ ஜாமாத்ரு பாவம் வஹந்
ஆகந்தா பரகால பக்திமஹிமா ஸந்தர்சநா யைவஹி
தத்ராஹ்லாத ஸர: ஸுதாகடரமா தேவீபர: கேவல:
தேவ: ஸ்ரீ ஸுமநோ விமாந விலஸத் பச்சான் முகோ பாஸதே

The post திருவாலி – திருநகரி வயலாளி மணவாளன் appeared first on Dinakaran.

Tags : Thiruwali ,Thirunagari ,
× RELATED சீர்காழி அருகே மங்கைமடம்-திருநகரி...