×

பார்சன்ஸ்வேலி அணை நீரேற்று மையத்திற்கு நிலத்தடி மின்கேபிள் அமைக்க ரூ.6 கோடி

*நகர் மன்ற கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள நீரேற்று மையத்திற்கு நிலத்தடி மின் கேபிள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஊட்டி நகர் மன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊட்டி நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஷ்வரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணைத்தலைவர் ரவிக்குமார் (திமுக) பேசுகையில்: “ஊட்டி நகராட்சிக்குக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்கு நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை நிதி வரவில்லை. எனவே, அதிகாரிகள் இந்த நிதியை பெற்ற வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசல் செல்லும் நடைபாதையில் ஏராளமான குடிநீர் குழாய்கள் உள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வதை கூடங்கள் (சிலேட்டர் அவுஸ்) சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நீலகிரி மாவட்டத்தில் காந்தல் பகுதியில் உள்ள சிலேட்டர் அவுஸ் சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்காக நீலகிரி எம்பி ராசா முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு இந்த கூட்டம் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல், மழைக்காலங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள நீரேற்று மையத்திற்கு நிலத்தடி கேபிள் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.6 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை மூலம் மாற்றுப்பாதை திட்டத்தின் கீழ் காட்டேரி முதல் காந்தல் வரை ரூ.81 கோடியில் புறநகர் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், நீலகிரி எம்பி ராசா மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், முன்னாள் அரசு கொராடா முபாரக் ஆகியோருக்கு ஊட்டி நகர் மன்ற கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது’’ என்றார்.

ஜார்ஜ் (திமுக): ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் மாற்றுப்பாதை கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி வந்ததை போல், மீண்டும் நகராட்சி நிர்வாகமே அனுமதி வழங்கும் இந்த திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகளுக்கு தேவையான பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூர் – ஊட்டி சாலையில், ஆவின் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேண்ட் லைன் பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது.

அதனை சீரமைக்க வேண்டும். சர்ச்ஹில் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.முஸ்தபா (திமுக): பாம்பேகேசில், ரோஜா பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பழமை வாய்ந்ததாக உள்ளதால் பல இடங்களில் உடைந்துள்ளது. இதனை புதுப்பிக்க வேண்டும். கெல்ஸ் அவுஸ் பகுதியில் தொடர்ந்து விதியை மீறி கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாம்பேகேசில் பகுதிக்கு மூன்றாவது குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் பார்சன்ஸ்வேலி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்பிஇஸ்மாயில் (திமுக): காந்தல் பகுதியில் மாரியம்மன் கோயில் முதல் காந்தல் முக்கோணம் வரையுள்ள கழிவுநீர் கால்வாயில் முறையாக தூர்வார வேண்டும். எனது வார்டில் உள்ள மூன்று சமுதாய கூடங்களும் தனியர் வசம் உள்ளது. அதனை நகராட்சி நிர்வாகம் எடுத்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ரவி (திமுக): எனது வார்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்ைக எடுக்க வேண்டும். மழை நீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும். தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும். குடியிருப்புகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுதாகீர் (திமுக): எனது வார்டிற்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலேட்டர் அவுஸ் சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீதா (திமுக): கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கேட்டு வாங்க வேண்டும். குண்டும் குழியுமாக மாறியுள்ள காந்தல் சாலையை சீரமைக்க வேண்டும். ரூ.19 லட்சத்தில் எனது வார்டிற்கு வந்த கழிப்பிட கட்டுமான பணிகளை வேறு வார்டிற்கு மாற்றி வழங்க கூடாது. எனது வார்டில் உள்ள கழிப்பிடங்களை இந்த நிதியின் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகமணி (திமுக): குளிச்சோலை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் குழாய்கள் அமைத்து கொடுக்க வேண்டும். வார்டு வரைமுறை செய்து தர வேண்டும்.
செல்வராஜ் (திமுக): எனது வார்டில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். வீடுகளுக்கு வரி விதிக்க வேண்டும். நொண்டுமேடு சாலைமை சீரமைக்க வேண்டும்.

கஜேந்திரன் (திமுக): மேல்காந்தி நகர் பகுதிக்கு குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். கீழ் காந்தி நகர் பகுதியில் தடுப்பு சுவர்கள் மற்றும் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து கொடுக்க வேண்டும்.

ரகுபதி (திமுக): 32 மற்றும் 34வது வார்டிற்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தொட்டி வனப்பகுதியில் உள்ளது. இங்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. ேமலும், வன விலங்குகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால், தண்ணீர் விநியோகம் செய்ய செல்லும் நகராட்சி ஊழியர்கள் பாதிக்கின்றனர். எனவே, இந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

உமா (காங்.): எச்பிஎப் பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, இப்பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் தெரு விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.

ராஜேஷ்வரி (காங்.): எனது வார்டில் மாஸ் கிளினீங் மூலம் குப்பைகள் மற்றும் செடி கொடிகளை அகற்ற வேண்டும்.

நாதன் (காங்.): ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது ஆட்டோ ஸ்டாண்டுகள் அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் 10 முதல் 20 ஆட்டோக்கள் வரை நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஊட்டி நகரில் ஆட்டோ ஸ்டேண்டுகளை முறைப்படுத்த வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

போட்டி கூட்டம் நடத்திய அதிமுக

ஊட்டி நகராட்சியில் 7 அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள், நேற்று நகராட்சி நுழைவுவாயில் முன் மேஜைகள் அமைத்து போட்டி நகர்மன்ற கூட்டத்தை நடத்தினர். அவர்களுக்குள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என தேர்ந்தெடுத்துக் கொண்டு கூட்டத்தை நடத்தினர். பின்னர், வடை மற்றும் டீ சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

The post பார்சன்ஸ்வேலி அணை நீரேற்று மையத்திற்கு நிலத்தடி மின்கேபிள் அமைக்க ரூ.6 கோடி appeared first on Dinakaran.

Tags : Parsonsveli Dam ,Tamil Nadu Government ,City Council ,Ooty ,Government of Tamil Nadu ,Parsonsweli Dam ,Ooty Municipality ,Dinakaran ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு