×
Saravana Stores

4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகன ஊர்தி; அவசர அழைப்புக்கு 1962 எண் அறிவிப்பு: சாவி வழங்கி அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூர், ஆக. 30: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 4 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டு மருத்துவ வாகனத்தில் உள்ள நவீன வசதிகள் குறித்து கேட்டறிந்து, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அந்த வகையில் கால்நடை வளர்போர் பயன் பெறும் விதமாக ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளில் சேவையாற்ற உள்ள சிகிச்சை ஊர்தி ஆண்டிமடம் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும், அரியலூர் ஒன்றிய பகுதிகளில் சேவையாற்ற உள்ள சிகிச்சை ஊர்தி அரியலூர் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டும், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி செந்துறை கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும், திருமானூர் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி திருமானூர் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும் செயல்பட உள்ளது.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கினை கொண்டு கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை அனைத்து கால்நடை வளர்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறவேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இதில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி , திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா , மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் , கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீது அலி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் ரமேஷ், முருகேஷ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகன ஊர்தி; அவசர அழைப்புக்கு 1962 எண் அறிவிப்பு: சாவி வழங்கி அமைச்சர் சிவசங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shiv Shankar ,Ariyalur ,Minister of Transport ,S.C.Sivasankar ,Shivashankar ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் சிலையை...