×

விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாரமே உள்ள நிலையில் எந்தெந்த நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி..? வழிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஆக. 30: விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாரமே உள்ளநிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகளுக்கான பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே மத்திய சுகாதார கட்டுப்பாடு வாரியத்தில் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

அதன்படி திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் ஏரி, (புட்லூர் ஏரிக, கூவம் ஈசா ஏரி (மப்பேடு), திருமழிசை, வெள்ளவேடு, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை சித்தேரி, ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆறு, திருத்தணி காந்தி ரோடு குளம், ஆர்.கே. பேட்டை வண்ணான் குளம், பள்ளிப்பட்டு கரிம்பேடு குளம், பொதட்டூர்பேட்டை பாண்டரவேடு ஏரி, திருத்தணி பராசக்தி நகர் குளம், கனகம்மாச்சத்திரம் குளம், கும்மிடிப்பூண்டி ஏழு கண்பாலம், கும்மிடிப்பூண்டி பக்கிங்காம் கால்வாய், திருவள்ளூர் காக்களூர் ஏரி போன்ற இடங்களில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

18 கட்டுப்பாடுகள் : வினாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைக்க முன் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருத்தணியில் உள்ள காவலர் தங்கும் முகாமில் நேற்று நடைபெற்றது. திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் விழாக்குழுவினர் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமை தாங்கினார். திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிலைகள் அமைத்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட 18 கட்டுப்பாடுகள் குறித்து டிஎஸ்பி கந்தன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு 287 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதுபோல் இந்த ஆண்டும் அதே அளவில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என்று டிஎஸ்பி தெரிவித்தார்.

செய்ய வேண்டியவை
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த இயற்கையாக மாற்றக்கூடிய மற்றும் நச்சுத்தன்மை அற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தலாம். அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்கக்கூடிய அலங்கார துணிகளை அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிரசாத விநியோகத்திற்கு மட்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தலாம். பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்இடி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும். அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தலாம்.

மின்சாரம் திருடக்கூடாது
விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை, ஆரணி, பாலவாக்கம், தாராட்சி, சூளைமேனி, தாமரைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஊத்துக்கோட்டை புதிய டிஎஸ்பி ஜான்விக்டர் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்ஐக்கள் ராஜ்குமார், பரந்தாமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டிஎஸ்பி ஜான் விக்டர் பேசுகையில், களி மண்ணால் ஆன சிலைகளைத்தான் வைக்க வேண்டும். சிலை வைப்பதற்கு முன்பு எந்த இடத்தில் சிலை வைக்கிறீர்கள் என போலீசிடம் அனுமதி பெற வேண்டும். காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டும். அதில் பக்தி பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும். குத்து பாட்டு போடக்கூடாது. சிலை அருகிலும், கரைக்கக்கூடிய இடத்திலும் பட்டாசு வெடிக்ககூடாது. விழாவிற்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடக்கூடாது. அனுமதி பெற்று மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் கட்சி, சாதி கட்சி தலைவர்களின் பேனர்களை வைக்கக்கூடாது. போலீசார் அனுமதி வழங்கிய இடத்தில்தான் சிலையை கரைக்க வேண்டும். பகல் 12 மணிக்குள் சிலைகளை எடுக்க வேண்டும் என்றார்.

செய்யக்கூடாதவை
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தெர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மேல் பூச்சுக்கும், அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மை உள்ள மற்றும் மட்கும் தன்மையற்ற ரசாயனங்கள், எண்ணெய், வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலால் ஆன பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது. வண்ண பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கி எறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். பண்டிகையின் போது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சி குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்டக்கூடாது. அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது. பிலமெண்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்தக் கூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

The post விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாரமே உள்ள நிலையில் எந்தெந்த நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி..? வழிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi ,Thiruvallur ,Collector ,Prabhu Shankar ,Lord Ganesha ,Vinayagar Chaturthi ,
× RELATED நாடு முழுவதும் தொடரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்..!!