×
Saravana Stores

தமிழகத்தில் பாகுபாடு இல்லாமல் உணவகங்களில் ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் அனைத்து தரப்பு உணவகங்களிலும் பாகுபாடு இல்லாமல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களின் ஒட்டு மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 391. இதில் ஏற்கனவே 235 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 127 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக செம்மையாக செய்யப்பட்டு வருகிறது.

உபரி உணவு வீணாக்காமல் என்கிற திட்டமும், சற்றே குறைப்போம் என்கிற வகையில் எண்ணெய், உப்பு போன்றவற்றை குறைப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. உணவகங்களில் ஆய்வு நடத்துவதில் பாகுபாடு இல்லை. அனைத்து தரப்பு உணவகங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்த ஒரு முறை உள்ளது. அதனை பின்பற்ற வேண்டும், அதற்கு மேல் உணவகத்தினரும் மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும். மேலும் மருத்துவப்பணியாளர்கள் மூலம் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அந்தவகையில் 1947 உதவி மருத்துவர்கள், 1291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 977 தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமனம் செய்திருப்பது, 946 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், சுகாதார அலுவலர்கள் என மொத்தம் 1583 பணியிடங்கள் என 6744 பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் 2553 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

The post தமிழகத்தில் பாகுபாடு இல்லாமல் உணவகங்களில் ஆய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Tamil Nadu Government Pannoku Hospital ,Omanturar Government Estate ,
× RELATED தமிழக மருத்துவத் துறை குறித்து...