×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காவல் உதவி மையங்கள் அனைத்து நாட்களும் செயல்படுமா?: அடிப்படை வசதிகள் மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க இத்திருக்கோயில் ஆன்மிக வரலாற்று சிறப்பு மிக்கது. மலையே மகேசன் திருவடிவம் என்பது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். எண்ணற்ற மகான்களையும், ஞானிகளையும் தன்னகத்தே ஈர்த்த அண்ணாமலையை, லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருதல் என்ற நிலை மாறி, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலை உருவானது. சமீப காலமாக பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் திருவண்ணாமலை நகரம் விழா கோலமாக காட்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதோடு, நடந்து கிரிவலம் செல்வது மட்டுமின்றி, அடி பிரதட்சண கிரிவலம், அங்க பிரதட்சண கிரிவலம், பரத நாட்டியம் ஆடிய படி கிரிவலம், நெய் விளக்கு ஏந்தியபடி கிரிவலம் என வினோதமான கிரிவலங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகை தரும் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, கிரிவலப்பாதை மட்டுமின்றி, கோயில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் தெலுங்கிலும் விபரங்களை எழுதி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியிருக்கிறது.

இந்நிலையில், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள காவல் உதவி மையங்கள், பவுர்ணமி மற்றும் விழா காலங்களில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டிக்கிடக்கிறது. தற்போது, தினமும் இரவு நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். எனவே, அவர்களின் அச்சம் போக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் உதவி மையங்கள் தினமும் செயல்படுவது அவசியமாகியிருக்கிறது. கிரிவலப்பாதையின் பாதுகாப்பை மேம்படுத்த, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால், கிரிவலப்பாதையில் புதியதாக மேற்கு காவல் நிலையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதேபோல், கிரிவலப்பாதையில் ஏற்கனவே தாலுகா காவல் நிலையம் செயல்படுகிறது. ஆனாலும், காவல் உதவி மையங்கள் செயல்பட்டால், தனியாக அல்லது குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் அச்சமின்றி கிரிவலம் செல்ல உதவியாக அமையும். மேலும், கிரிவலப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் செயல்படவில்லை. அதற்கான வயர்கள் அறுந்து விழுந்து கிடக்கிறது.

சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் மூன்றாவது கண்ணாக திகழும் சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், கிரிவலப்பாைத கண்காணிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ரோந்து வாகனங்களும் பெரும்பாலான நாட்களில் இயங்குவதில்லை. கிரிவலப்பாதையில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை. பவுர்ணமி நாட்களில் மட்டுமே ஒளிரவிடுகின்றனர். எனவே, இருள் சூழ்ந்த பகுதிகளை கடந்து செல்லும்போது பக்தர்கள் அச்சப்படுகின்றனர். மேலும், பக்தர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும், அனைத்து நாட்களிலும் அவற்றை திறந்து வைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல், கிரிவலப்பாதையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள், பக்தர்களுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, கனரக வாகனங்களை கட்டுப்படுத்தவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

The post திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காவல் உதவி மையங்கள் அனைத்து நாட்களும் செயல்படுமா?: அடிப்படை வசதிகள் மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Police Help Centers ,Thiruvannamalai Kriwalabathi ,Thiruvannamalai ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Pancha ,Bhutha ,Malaye Mahesan ,Thiruvativam ,Tiruvannamalai Kriwalabathi Police Help Centers ,
× RELATED திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்