×

மனையறத்தின் வேர் பெரியபுராணம்

உமையொரு பாகனால் ‘உலகெலாம்’ என்று சொல்லெடுத்துக் கொடுக்கப்பட்டு கொள்கையினால் உயர்ந்த சைவ அடியார்களின் வரலாற்றைப் பேசி நிற்பது பெரியபுராணம். இதில், அறுபத்து மூன்று நாயன்மார்களையும், ஒன்பது தொகை அடியார்களையும் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இப்பெரிய புராணத்தில் பேசப்பட்டுள்ள மனையறத்தின் வேராகிய பெண்ணின் மேன்மை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

திருநீலகண்டர் புராணம்

திருநீலகண்ட நாயனார் இளமைக் காலத்தில் சிற்றின்பத்தில் எளியராக இருந்தார்.
‘‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியரானார்’’ இதனை அறிந்த அவர்தம் மனைவியார், வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடுத்தோ, கணவனை விட்டுப் பிரிந்து பிறந்த அகம் சென்றோ, தன் சினத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, கட்டிய கணவரை தண்டிக்காமல் அவரைத் திருத்தும் பொருட்டு,
‘‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்’’

என்று ஆணையிட்டமையால், திருநீலகண்டர், மற்றை மாதரார் தம்மையும் தம் மனத்தினாற் கூட நினையாது, தவ வாழ்வினைத் தழுவி, கொள்கை நெறியுடன் வாழச் செய்தார். இவ்வரலாற்றில் தன் கணவனை திருத்திய பாங்கின் மூலம் அவர் உயர்ந்து நிற்கிறார். மேலும்,கணவன் சொல்லையே மனைவி கேட்கும் பழக்கத்தை மாற்றி, மனைவியின் சொற்படி ஓர் ஆணினை வாழச் செய்தது திருநீலகண்டர் மனைவியின் ஆணை. இதன்மூலம் மனையறத்தின் வேராக பெண்மை விளங்குகிறது.

இயற்கையார் புராணம்

இயற்கை நாயனார் புராணத்தில், அடியவராக வந்த சிவபெருமான் ‘உம் காதல் மனைவியை வேண்டி வந்தேன்’ என்று கேட்க, உடனே, தம் வாழ்க்கைக் கொள்கையின்படி, இல்லையே என்று எண்ணாமல் தம் மனைவியை அடியாருக்கு வழங்கினார். இது பெண்ணடிமைத்தனம் என்று சிலர் கருதலாம். ஆனால், இச்செயல் பெண்ணின் பெருமையின் உச்சமாகும். காரணம், இயற்கையார் தம் மனைவியாரை அடியவருக்குத் தருமிடத்தில் அவரின் மனைவியார் எதிர்மொழி பேசி, வாதம் செய்யவில்லை மாறாக, தன் கணவர் வாழ்க்கைக் கொள்கையின்படி, முன்பிருந்து செய்து வந்த அத்துனை கொடைகளுக்கும் மாறுபாடின்றியே வாழ்ந்துள்ளார். இல்லறத்தில் கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்தே ஒரு செயலைச் செய்ய வேண்டும். அவ்வகையில், இயற்பகையார்,

‘மிக்கசீர் அடியார்கள் யார் எனினும்
வேண்டும் யாவையும் இல்லை என்னாதே…’’
கொடுப்பவர். இவ்வண்ணம், ‘வேண்டும் யாவையும்’ அடியார்க்கு கொடுத்து வந்த காலத்து அவரின் மனைவியார் எதிர்கூறாத வாழ்க்கையில் அவர்தம் கொள்கைத்துணை நலமாகவே வாழ்ந்துள்ளார் என்பது புலப்படுகிறது.

சமயசாத்திரங்களின் படி தானம், யாகம் போன்ற நல்லறங்களை கணவன் தன் மனைவியுடன் தான் கருத்தொருமித்துச் செய்ய வேண்டுமென்பது மரபு. அவ்வகையில், இயற்பகை நாயனார் அனைத்து அறங்களையும் செய்து வந்துள்ளார். இப்படி அறம் செய்து வரும் நாளில், சிவபெருமான் ஓர் அடியவராக வந்து இயற்கை நாயனாரிடம் அவர்தம் மனைவியாரைக் கேட்டவுடன் எந்தவொரு மறுமொழியும் கூறாமல் தந்துவிடுகிறார். அப்போது, இயற்கைபகையாரின் மனைவியாரும் தான் சம்பந்தப்பட்ட விடயத்திலும்கூட மறுசொல் கூறாமல், தன்னைத் தருவதற்குத் தானே துணை நிற்கிறார்.

தன்னை மறையவருக்கு கணவனார் வழங்கும்போது இயற்பகையாரின் மனைவியார்,

‘‘என் உயிர்க்கு ஒருநாதர் நீர் உரைத்தது
ஒன்றை நான் செய்யும் அத்தனை அல்லால்
உரிமை வேறு உளதோ எனக்கு’’
என்று, ‘என் உயிருக்கு நாதராக விளங்கும் தாங்கள் உரைக்கும் எதனையும் செய்வதுதான் எனது உரிமை’ என்கிறார். மேலும்,
‘‘தன் தனிப்பெரும் கணவரை வணங்கத் தாழ்ந்து’’
தன் கணவரை வணங்குகிறார். இதன் மூலம் இயற்பகையாரின் மனைவியார் அடியவருடன் செல்வது கணவனாரின் வழிகாட்டுதலின்படி கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறார் என்பது தெளிவாகிறது. இப்படி, இயற்பகையாரை மனைவியார் வணங்கியவுடன் இயற்பகையார் சற்றும் காலம் தாழ்த்தாது, தான் கட்டிய மனைவியாக இருப்பினும் தற்போது அடியவருக்கு வழங்கப்பட்ட ஓர் அடியார் எனக்கருதி தன்னைத் தொண்டன் என்று கருதிக் கொண்டு மனைவியாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

இதனை, ‘‘தொண்டனார் தாம் எதிர்வணங்க’’என்ற அடி உணர்த்துகிறது. இச்செயல் பெண்மைக்கு கிடைத்த மேன்மையாகும். பின்னர், அடியாரையும் மாதினையும் பாதுகாப்பாக ஊரைக் கடக்க உதவுகிறார் இயற்பகையார். அப்போது, சிலர் எதிர்ப்பதுகண்டு அஞ்சிய அடியவரை அந்தப்பெண்,‘‘இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்கை வெல்லும்’’

என்று, ‘பயப்படாதீர்கள் இயற்பகையார் வெல்வார்’ எனத் தேற்றுகிறார். இதன்மூலம் இயற்பகையாரின் திருவினும்பெரிய மனைவியார், மனமுவந்தே அடியாருடன் சென்றார் என்பது புலப்படுகிறது. இச்செயல் பெண்ணின் பெருமையை உயர்த்துவதாக அமைகிறது.

‘‘இல்லையே எண்ணாத இயற்பகை’’ (திருத்தொண்டத்தொகை.1-3)
என்று சுந்தரரால், இயற்பகையார் போற்றப்பட்டதற்கு அவரின் மனைவியாரும் காரணமாய் நிற்கிறார். இவ்வரலாறு,
‘‘காதல் மனையாளும் காதலனும் மாறின்றி
தீதில் ஒருகருமம் செய்பவே – ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி எண்முகத்தாய்
நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்’’ (நன்னெறி.7)
எனும் பாடலுக்கு உதாரணமாக அமைகிறது.

இளையான்குடியார் புராணம்

ஐம்புலத்தாருள் விருந்தினரை ஓம்புவது இல்லறத்தில் ஒரு கடமையாகும். அவ்வகையில், இளையான்குடி மாறநாயனார் பசிப்பிணி போக்குவதை வாழ்க்கைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார். ஒரு நாள் அவரை சோதிக்க, தன் மனைவியுடன் சிவபெருமான் அடியவராக இளையான்குடி மாறனார் வீட்டிற்கு இரவில் வருகிறார். அப்போது நாயனார்,
‘‘நமக்கு முன்பிங்கு உணவிலை யாயினும்….
………………………………………………..
அடிசல் தகன்ற
அமைக்கும் ஆறு எங்கனே? அணங்கே’’
என்ற பாடலில், ‘நமக்கே உணவில்லை அப்படியிருக்க வந்த விருந்தினரை எப்படிப் பேணுவது’ என்று, தம் மனைவியாரிடம் கேட்கிறார். இதில், மாற நாயனார் உள்ளத்தில் எழுந்த வினா? ‘நமக்கே உணவில்லை’ என்பதாம். நாம் ஒன்றும் வைத்துக் கொண்டே வஞ்சகம் செய்யவில்லை. நாமே வறுமையில் வாடுகிறோம். ஆகவே நமக்கே உணவு இல்லாத போது எப்படி மற்றவரைப் பேணமுடியும்? அவரது கேள்வி. ஆனால், அவரின் மனைவியார் அதனைப் பொருட்படுத்தாது.

‘‘செல்லல் நீக்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக் கொடு வந்தால்…’’
என்று, தமக்கு பின்னாளில் பயன்படும் வகையில் விதைத்து வைத்த விதை நெல்லை வயலில் இருந்து எடுத்து வரச்சொல்கிறார்.

ஆக, ‘மாறனார் தமக்கே உணவில்லை. இதில், விருந்தினரை எப்படிப் பேணுவது’ என்று வருந்தி நினைக்க, அவரின் மனைவியார் எதிர் காலத்திற்குப் பயன்படும் விதை நெல்லையே உணவாக மாற்றலாமென்று யோசனை கூறுகிறார். வேளாண் அறத்தில் விதைநெல்லை விற்காமலும், உணவு சமைக்காமலும் காப்பது இன்று வரை மரபாக உள்ளது. அரிசி இன்றைய தேவையையும், நெல் நாளைய தேவையையும் விதைநெல் எதிர்காலத் தேவையையும் நிறைவு செய்வது ஆகும். அப்படியிருக்க விதைத்த விதைநெல்லை உணவாக்க முற்பட்ட மாறனாரின் மனைவியார் மனையறம் காத்து விருந்தோம்பல் செய்ததில் பெண்மையின் நுண்ணிய அறிவும், தன்னலமற்ற தியாகமும் வெளிப்படுகிறது.

சிறுத்தொண்டர் புராணம்

சிறுத்தொண்டர் வரலாற்றில் பிள்ளைக்கறி கேட்ட, அடியவருக்கு அடியவர் சொன்னபடி, கறி சமைத்திருக்கிறேன் என்று வாக்களித்து விடுகிறார் சிறுத்தொண்டர். பின்னர், பிள்ளைக்கறி சமைக்க குழந்தையைத் தருவார் யாருமில்லாத காரணத்தால் சிறுத்தொண்டர்க்கு தான் கொடுத்த வாக்கினைக் காக்க,

‘‘எனை இங்கு உய்ய, நீ பயந்தான்தனை அழைப்போம் யாம்’’

என்று, அவரின் மனைவிடம் ‘நீ’ பெற்ற பிள்ளையை ‘நாம்’ இருவரும் சேர்ந்து ‘நான்’ இங்கு உய்வதற்காக அழைப்போம் என்கிறார். இதில், சிறுத்தொண்டர் தான் உய்வதற்காக அவரின் மனைவி அங்கமெல்லாம் நொந்து பெற்ற குழந்தையைத் தருகிறார் என்பது புலப்படுகிறது. ஆகவே, சிறுத்தொண்டரை, அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராக ஆலயத்தில் நிற்கச் செய்ததில் அவரின் மனைவியாருக்கும் பெருமிடம் உண்டு. தான் ஈன்ற குழந்தையை கறியமுதிற்காக வழங்கி சிறுத்தொண்டரின் வாக்கினை அவரின் மனைவி காத்துள்ளார். அவர் மனைவியாரின் செயலின் மூலம் பெண்மையின் மேன்மைமிகு ஈகைக்குணமும், வள்ளன்மைக் குணமும் வெளிப்படுகிறது.

திருநாவுக்கரசர் புராணம்

இளமையில் நிலையாமை பலவற்றைக் கண்ட திருநாவுக்கரசர் சமணசமயம் சார்கிறார். அவரின் சகோதரியாரான திலகவதியார் அவரைப் பரசமயக்குழியிலிருந்து மீட்டு, சைவநெறி சார, நாள்தோறும் இறைவனை வேண்டுகிறார். அப்போது,
‘‘………………..உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எமையடையத் தவம்
முயன்றான்
அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம்’’
என்று சிவபெருமான் நாவுக்கரசருக்குச் சூலை நோய் கொடுக்கிறார். அப்போது, தம் தமக்கையாரான திலகவதியாரிடம் சார்ந்து,
‘‘திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப்
பெருவாழ்வு வந்ததென பெருந்தகையார்’’

திருநீறு பணிந்து பெறுகிறார். இதில், திலகவதியார் ‘குரி’ என்ற நிலையிலிருந்து திருநாவுக்கரசருக்கு ‘திருநீறு’ வழங்குகிறார். ஆகவே, இவ்வரலாற்றின் மூலம் பெண்மையை ‘குரு’ என்ற நிலைக்கு உயர்த்தியமை வெளிப்படுகிறது. இது மற்ற சமயங்களில் கிடைக்காத ஒரு சிறப்பம்சமாகும்.

நிறைவாக பெரியபுராணத்தில் உள்ள நாயன்மார்களுள் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு. ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும், பெரியபுராணத்தில் ஆண்பால் நாயன்மார்கள் அநேகரின் உயர்விற்குப் பெரும்பான்மையாகக் காரணமானவர்கள் பெண் நாயன்மார்கள். மற்றும், அதில் இடம் பெற்றுள்ள நாயனார் அல்லாத பெண் பாத்திரங்களும் ஆவர். ஆகவே, பெரியபுராணம் பெண்மைக்கும் மேன்மை தந்து வளமார் வாழ்விற்கு வழிகாட்டும் பேரிலக்கியம் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் ஆண் பெண் என்ற வேறுபாடுகளின்றி இருபாலரும் சமம் என்று போற்றுதல் வேண்டும்.

சிவ.சதீஸ்குமார்

The post மனையறத்தின் வேர் பெரியபுராணம் appeared first on Dinakaran.

Tags : Saiva ,Umayoru Pagan ,Nayanmars ,Manayaram ,
× RELATED நாகப்பட்டினம் கடற்கரையில்...