×

ராஜயோகங்கள் அருளும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

ஸ்ரீ ராஜமன்னார்குடி எனும் க்ஷேத்ரத்தில் சேவை சாதிக்கும் ஸ்ரீ வித்யா ராஜகோபால சுவாமியின் திவ்ய வைபவங்களையும், அந்த அதிதிவ்ய ரூபம் உணர்த்தும் மாபெரும் உபநிஷத் பிரம்ம வித்யைகள் குறித்தும், லீலா வினோதங்கள் குறித்தும் இங்கு நாம் விஸ்தாரமாக பார்க்க உள்ளோம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ராஜமன்னார்குடி அபிமான ஸ்தலமாக போற்றப்படுகிறது. சைவ, வைணவ பேதத்தை விடுத்து பிரமாண்டமான பார்வையில், இதைபார்க்கவுள்ளோம்.ராஜமன்னார்குடி என்கிற க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளான ஸ்ரீ வித்யா ராஜகோபாலனைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம். கடலின் முன்பு நிற்கும் சிறுவன்போல் இதை எப்படி விளக்குவது என்று விக்கித்து நின்றாலும், கடலலை போல அவனது அருளலையே நம்மை உந்தித் தள்ளுவதை உணர்ந்தபடி அனுபவிப்போம். ஏனெனில், இதுவரை காணாத அதிசயம்போல் சகல சம்பிரதாயங்களின் மூலமூர்த்தியாக ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் விளங்குகிறான்.

முதலில் நாம் அந்த ஸ்ரீ வித்யா ராஜகோபாலனின் ரூபத்தை மனதில் கொண்டுவந்து தரிசிக்கிறோம். பெருமாளைச் சுற்றிலும் பசுக் கூட்டம் நிற்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணர் த்ரிபங்கி நிலையில் சேவை சாதிக்கிறார். ஒரு திருக்கரத்தை பசுவின் மேலே அல்லது சத்யபாமாவின் தோளின் மீது வைத்திருப்பதாகச் சொல்வது வழக்கம், அதற்கடுத்து மற்றுமொரு திருக்கரத்தில் பசுக்களை மேய்ப்பதற்குரிய கோலை வைத்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது சட்டென்று நம்முடைய நெஞ்சில் நிழலாடுவது என்னவெனில், ஒரு சிறிய பையன் பசுக் குழாத்துடன் கூடிய இடையன் இங்கு கோபாலனாக நின்றருளுவதை பார்க்கிறோம். அதுசரி, கோபாலன்தானா என்று கொஞ்சம் நெருங்கிப்பார்க்கும்போது, அவன் கோபாலனாக இருந்தால்கூட அந்த திருமுகம் அந்த நிற்றலில் ஒரு கம்பீரம் இருப்பதை இன்னும் சற்று உற்றுப்பார்க்கும்போது உணர்கிறோம். ஆஹா…. இவன் பாலகன் அல்லவே கம்பீர புருஷனாக இருக்கிறான் என்று அந்த திருமுகத்தின் மலர்வு தெரிவிக்கிறது.

இது எப்படியிருக்கிறதெனில், அந்தக் காலத்தில் ராஜாக்கள் மாறு வேஷத்தில் வந்து பிரஜைகள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்போது சற்று உற்றுப் பார்த்தால் வந்திருப்பது மகாராஜாதான் என்று உணர்வதுபோல், இங்கு இடையனாக, கோபாலனாக இருப்பவர் வெறும் கோபாலன் இல்லையே இவர் ராஜகோபாலன் அல்லவா… என்று பிரமிப்போடு காண்கிறோம். சரி, இது ராஜகோபாலன் மட்டும்தானா… என்று நெருங்கிப் பார்க்கிறோம். அப்படி நெருங்க நெருங்க நம்முடைய மனமானது அவனை நோக்கி காந்தம்போல் ஈர்க்கப்படுகின்றது. அவனை நோக்கி நாம் ஆகர்ஷிக்கப்படுகின்றோம். மற்ற எதையுமே சிந்திக்காத அளவிற்கு அவரை மட்டுமே சிந்திக்கின்ற அளவிற்கு ஈர்க்கக்கூடிய ஒரு வித்தை அவரிடம் இருக்கின்றது. நம்மால் சாதாரணமாக செய்ய முடியாத ஒரு விஷயத்தை வேறொருவர் செய்தால் நாம் அந்த சக்தியை வித்தை என்கிறோம்.

இந்த வித்தை என்கிற வார்த்தையானது ஸம்ஸ்க்ருத வார்த்தையான வித்யா என்பதிலிருந்து வித்தை என்றாகியிருக்கிறது. முதலில் கோபாலனாக தெரிகின்றான். அதற்கடுத்து அவனுடைய கம்பீரத்தை காணும்போது ராஜகோபாலனாக தெரிகின்றான். வெறும் கோபாலன் அல்ல… ராஜகோபாலனாக காட்சியளிக்கிறான். நம்முடைய மனதை ஆகர்ஷிக்கக்கூடிய வித்தை அவனிடம் இருப்பதால், வித்யா ராஜகோபாலனாக தெரிகிறான். சரி, இப்போது அந்த வித்தையானது நம் மனதை ஆகர்ஷணம் மட்டும்தான் செய்கின்றதா… சாதாரணமாக ஈர்க்க மட்டும்தான் செய்கிறதா என்று பார்த்தால், இந்த ஆகர்ஷத்தைத் தாண்டி நமக்கு மேலான ஞானத்தை கொடுக்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறான். அப்போது இது சாதாரண ஈர்ப்பு மட்டுமல்ல… அந்த ஈர்ப்பே எதனால் எனில், நம்முடைய சொரூபத்தை காண்பித்துக் கொடுத்து நமக்கு ஞானத்தையும் மோட்சத்தையும் வழங்கக்கூடிய நிலையில் இருப்பதால், அவன் வெறும் வித்யா ராஜகோபாலன் அல்ல. ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்.

வித்யா என்கிற பதத்திற்கு ஞானம் என்று பொருள். அந்த உயர்ந்த ஞானத்தை, எது மோட்ச சாதனமாக இருக்கிறதோ அந்த மோட்ச சாதனமான உயர்ந்த ஞானத்தை அவன் கொடுப்பதனால், அவன் ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாகக் காட்சி கொடுக்கிறான். இப்போது மீண்டும் பாருங்கள். அவர் வெறும் கோபாலன் அல்ல. ராஜகோபாலன். அடுத்து வெறும் ராஜகோபாலன் அல்ல. வித்யா ராஜகோபாலன். அடுத்ததாக வித்யா ராஜகோபாலன் மட்டுமல்ல ஸ்ரீ வித்யா ராஜகோபாலன். இப்போது இந்த ரூபமும் நாமமுமே நமக்கு இவ்வளவு விஷயங்களை காண்பித்துக் கொடுக்கின்றது. இதற்கடுத்து தத்துவார்த்தமாக பார்க்க வேண்டு மென்று சொன்னால், அந்த ஸ்தலத்தினுடைய புராணத்தைப் பார்ப்போம். இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு ரிஷிகளுக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். இந்த கோப்ரளயர், கோபிலர் என்கிற இரண்டு ரிஷிகளும் கண்ணனை தரிசிப்பதற்காக துவாரகாவிற்கு சென்றிருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் சென்று தரிசிப்பதற்குள் பகவான் தன் அவதாரத்தை நிறைவு செய்துவிட்டார். இதை சம்பிரதாயத்தில் பெருமாள் தன்னடிச் சோதி எழுந்தருளிவிட்டார் என்பார்கள். இப்போது அந்த ரிஷிகளிடம் நீங்களிருவரும் தட்சிண துவாரகை என்கிற தலமிருக்கிறது. இது பாரத வர்ஷத்தின் தென்பகுதியிலிருக்கிறது. அந்த க்ஷேத்ரத்துக்கு சம்பகாரண்யம் என்று பெயர். அங்கு ஹரித்ரா நதியின் கரைக்கு அருகேயுள்ள இந்த க்ஷேத்ரத்தை தரிசியுங்கள் என்று சொல்ல, அந்த இரு ரிஷிகளும் இன்றைய ராஜமன்னார்குடி என்கிற தலத்திற்கு வருகிறார்கள். அந்த இரு ரிஷிகளும் பயணப்பட்டு இத்தலத்திற்கு வருகிறார்கள். இங்கே ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக சேவை சாதிக்கிறார். அந்த இரு ரிஷிகளுக்கும் வேதாந்த ஞானத்தை கைக்கொண்டு மோட்சமடைய வேண்டுமென்கிற எண்ணம் இருந்ததால், சகுண ரூபமாக (அதாவது உருவத்தோடு) அவர்களுக்கு காட்சி கொடுத்தால்கூட, கூடவே அதிஆச்சரியமாக கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த முப்பத்திரண்டு லீலைகளை அவர்களுக்கு காண்பித்து கொடுக்கிறார்.

கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது முதல் பூதனாவதம், உரலுடன் கட்டுண்ட சேவை, காளிங்க நர்த்தன சேவை, கோபிகைகளோடு அமர்ந்து உண்ணுதல், கோவர்த்தன கிரிதாரி சேவை, வத்ஸாபரஹரண சேவை, பாண்டவ தூத சேவை, கீதோபதேசம்… என்று எடுத்துக் கொண்டால் முப்பத்திரண்டு லீலைகளையும் அந்த இரண்டு ரிஷிகளுக்காக மீண்டும் நடத்திக் காண்பிக்கிறார். அதாவது தரிசனமாத்திரத்தில் நிகழ்த்திக் காட்டுகிறார். இதன் சிறப்பே இன்றைய ராஜமன்னார்குடியில் கிருஷ்ணாவதாரம் நிறைவடைந்ததற்கு பிறகு, இந்த லீலைகளை நடத்திக்காட்டும் வைபவம் அந்த ரிஷிகளின் பொருட்டு நடக்கிறது. ஆனால், ஏன் இந்த 32 லீலைகளை காண்பிக்க வேண்டும் என்கிற இடத்தில்தான் முக்கியமான விஷயம் இருக்கிறது. ஏனெனில், இந்த லீலை களின் மூலமாகத்தான் வேதாந்த விஷயத்தை கிருஷ்ணர் அருள்கிறார் என்பதுதான் இங்கு முக்கியமானது. ஏனெனில், உபநிஷதங்களின் மையம் காட்டும் ஞானமே இங்கு முக்கியமானது. நம்முடைய ஆச்சார்யர்கள், ஞானிகளெல்லாம் என்ன செய்திருக்கிறார்கள் எனில், இந்த உபநிஷதங்கள் முழுவதும் ஞானமாக இருந்தால்கூட, ஒருசில குறிப்பிட்ட இடங்களை அதாவது உபநிஷதங்களில் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து, ‘‘இப்படி சாதனை செய்தால் ஞானம் அடையலாம்’’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப்படி காட்டித் தருகின்ற அந்த இடங்களுக்குத்தான் வித்யா என்று பெயர். எனவே, இந்த முப்பத்திரண்டு இடங்களுக்கும் வித்யா என்றே பெயர். அதாவது உபநிஷதங்களில் உள்ள முப்பத்திரண்டு வித்யைகள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சாந்தோக்ய உபநிஷதத்தில் பதினாறு, பிரஹதாரண்யகத்தில் ஐந்து, தைத்திரீயத்தில் மூன்று, கடோபநிஷதத்தில் மூன்று, கௌஷீதகியில் மூன்று, முண்டகோபநிஷதத்தில் ஒன்று, ஈசாவாஸ்யத்தில் ஒன்று என்று முப்பத்திரண்டு வித்யைகள் இருக்கின்றன. இந்த வித்யைகள் எல்லாமுமே நமக்கு ரிஷிகள் எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இந்த வித்யைகளை meditations என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி meditations என்று சொல்வதைவிட வித்யைகளை ஞானத்திற்குரிய சாதனங்கள் என்று சொல்லலாம். இந்த முப்பத்திரண்டு வித்யைகளை காண்பிப்பதற்காகத்தான் கிருஷ்ண பகவான் 32 லீலைகளை ரிஷிகளுக்கு காண்பிக்கிறார். நமக்கு நேரடியாக இந்த ஞானத்தைக் கொடுப்பதை விட, தன்னுடைய விபவ அவதாரத்தின் மூலமாக, அந்த அவதாரத்திலுள்ள லீலைகள் மூலமாக நமக்கு ஞானத்தை கொடுத்தார் எனில், அது நமக்கு பக்தியையும் கொடுக்கும்.

அந்த பக்தியின் மூலமாக ஞானத்தையும் அடைய முடியும். ஏனெனில், நேரடியாக ஞானத்தை சொன்னால் ஞானத்தை கிரகித்துக்கொள்ளக் கூடிய சக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் அறிந்துகொள்ள முடியும்படி நேரிடலாம். ஆனால், லீலை மூலமாக கொடுத்தால் அது எல்லோருக்கும் போய்ச் சேரும். அப்போது அந்தவொரு காருண்யத்தினால் அந்த ரிஷிகளை முன்னிட்டுக்கொண்டு முப்பத்திரண்டு லீலைகளை காண்பித்து, அந்த முப்பத்திரண்டு லீலைகளிலேயும் உபநிஷதங்களில் சொல்லக்கூடிய 32 வித்யைகளை உபதேசம் செய்கிறார். அந்த வித்யைகளுள் சில… சத் வித்யா, பூம வித்யா, சம்வர்க்க வித்யை, ப்ருகு-வாருணி வித்யை, காயத்ரீ வித்யா, ஜ்யோதிர் வித்யா, உபகோசல வித்யா… ஈஸாவாஸ்ய உபநிஷதத்தில் சொல்லக்கூடிய ஈஸாவாஸ்ய வித்யா ஆகியவை. உபநிஷதத்திலிருக்கக்கூடிய வித்யைகளை தன்னுடைய லீலைகளினால் காண்பித்து கொடுக்கிறார். ஒரு சாதகன் உபநிஷதங்களை தேடி, படித்து, அடையக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் சாதாரணமாக தன்னுடைய லீலைகளினாலேயே காண்பித்துக் கொடுத்ததனால் ஸ்ரீ கிருஷ்ணர் இங்குஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக இருக்கிறார்.

இதுவொரு விஷயம். இப்போது இதைவிட இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்ப்போம் வாருங்கள். இந்த முப்பத்திரண்டு வித்யைகளையும் காண்பித்துக் கொடுத்ததற்குப் பிறகு அந்த முப்பத்திரண்டையும் தாண்டி, முப்பத்து மூன்றாவது வித்யையாக தானே இருக்கிறார். இந்த முப்பத்திரண்டு வித்யைகளும் அடையக்கூடிய ஸ்தானத்தில் யார் இருக்கிறார் எனில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார். சுவாமி முப்பத்திரண்டு வித்யைகளையும் காண்பித்துக் கொடுத்துவிட்டு, இந்த முப்பத்திரண்டு வித்யைகளாலேயும் அடைய வேண்டிய பொருள் யாரெனில், அது நான்தான் என்று காண்பித்து, முப்பத்து மூன்றாவது வித்யையாக சுவாமி இருக்கிறார்.அதற்கடுத்து சுவாமியினுடைய ரூபத்தை பார்க்கும்போது, இதிலொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் வலது காதில் குண்டலம் போட்டிருக்கிறார். இடது காதில் தோடு போட்டிருக்கிறார். குண்டலம் என்பது ஆண்கள் அணியக்கூடிய ஆபரணம். தோடு என்பது பெண்கள் அணியக்கூடிய ஆபரணம். இங்கு சுவாமி ஏன் இந்த இரண்டு ஆபரணங்களையும் போட்டிருக்கிறார் என்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அதற்கடுத்து சுவாமியினுடைய பாதத்தில் இன்றைக்கும் ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. ஸ்ரீ சக்ரம் என்பது பொதுவாகவே ஸ்ரீ வித்யா உபாசனையில் பூஜை செய்யக்கூடிய அம்பாளுடைய சொரூபம்தான் ஸ்ரீ சக்ரம். இங்கு ராஜகோபாலனுடைய பாதத்தில் ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. இதற்கடுத்து ஸ்ரீ ராஜகோபாலனுடைய ரூபம் பார்த்தால், வலது பக்கம் குண்டலமும் இடது பக்கம் தோடும் போட்டிருப்பதால், இந்த ரூபத்தில் ஏதோ வித்தியாசம் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்.

(தொடரும்)

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

 

The post ராஜயோகங்கள் அருளும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் appeared first on Dinakaran.

Tags : Srividya Rajakopalan ,Rajayokala ,Sri Vidya Rajakopala Swami ,Sri Rajakopala ,Swami ,Leela ,Rajayokaka Arulum ,
× RELATED ஸ்ரீவித்யா ராஜகோபாலன்