×

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியிடம் தீவிர விசாரணை: 3 கிலோ கஞ்சா, 6 பட்டா கத்திகள், 2 திருட்டு மொபட் பறிமுதல்


தாம்பரம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா, 6 பட்டா கத்திகள், 2 திருட்டு ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த ஜூலை மாதம் 5ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இக்கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பவ செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித் மீது ஆந்திராவில் இரட்டை கொலை வழக்கு, திண்டிவனம் அருகே பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கு, பிரபல ரவுடியும், பாஜ பட்டியல் அணி மாநில செயலாளருமான நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யாவின் தம்பி உதயா கொலை வழக்கு, தாம்பரம் மற்றும் சேலையூரில் ஒரு கொலை முயற்சி வழக்கு, தேனாம்பேட்டையில் கொள்ளை வழக்கு மற்றும் 2 ஆயுத வழக்கு உட்பட 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரும்புலியூர் அருகே உள்ள வாணியங்குளம் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலம் கீழ் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில், ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேமடைந்த போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பட்டாக் கத்தி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், கடந்த சில ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளியான சஜித் (எ) புறா சஜித் (31) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவுடன், சஜித் தொடர்பில் உள்ளாரா, சீசிங் ராஜா இருக்கும் இடம் சஜித்துக்கு தெரியுமா என போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கடந்த 2021ம் ஆண்டுக்குப் பிறகு சீசிங் ராஜாவுடன், சஜித்துக்கு தொடர்பு இல்லை என அவர் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் படப்பை, சர்ப்பனஞ்சேரி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்திய போது அங்கு கஞ்சா மற்றும் பட்டாக்கத்திகள் இருந்தன. இதனைத்தொடர்ந்து 3 கிலோ கஞ்சா, ஒரு எடை போடும் இயந்திரம், 6 பட்டாக் கத்திகள், 2 ஸ்கூட்டர்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த 2 ஸ்கூட்டர்களும் திருட்டு வாகனம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த திருட்டு வாகனங்களை பயன்படுத்தி சஜித் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் மோகன் எனபவரிடம் ₹5000 வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். மேலும் சஜித்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சீசிங் ராஜா குறித்து ஏதாவது தகவல் இருக்கிறதா, யார், யாருடன் சஜித் தொடர்பில் இருந்தார், அடுத்தடுத்து என்னென்ன குற்ற சம்பவங்களில் ஈடுபட இருந்தார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கஞ்சா விற்பனையின் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கியுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வது, வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த குற்றவாளிகளை கைது செய்யும் பணிகளிலும் போலீசார் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி சஜித் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியிடம் தீவிர விசாரணை: 3 கிலோ கஞ்சா, 6 பட்டா கத்திகள், 2 திருட்டு மொபட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Seesing Raja ,Armstrong ,Tambaram ,Sajith ,Seesingh Raja ,Bahujan… ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும்...