×

பழநியில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் கண்டுபிடிப்பு

Palani, East India Companyபழநி : பழநியில் பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி எழுதிய 19ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், அடிவாரத்தை சேர்ந்தவர் மீனா. இவர் தன்னிடமிருந்த பழங்கால ஆவணத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராணயமூர்த்தியிடம் வழங்கினார். அதனை ஆய்வு செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆவணம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் என்பதும், அதை பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா எழுதி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணம் பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு இறுதியில் அவருடைய கையொப்பம் இடப்பட்டுள்ளது. ஆவணம் மொத்தம் 31 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. தனது ஜமீன் பண்ணையின் 23 ஏஜன்ட்களின் பெயர்களை எழுதி அதை மானேசர்களின் விபர பத்திரம் என்று கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாளில் பதிந்து வைத்துள்ளார்.

இந்த விபர பத்திரம் ஈஸ்வர ஆண்டு மாசி மாதம் 9ம் தேதி எழுதப்பட்டுள்ளது. இது 1818ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஆகும். ஒரு கடினமான தாளில் இந்த பத்திரம் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் வட்ட வடிவமான கட்டண முத்திரையானது பத்திரத்தாளின் இடது மேல் புறம் ‘இன்டாக்ளியோ’ எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

மேல் வலது புறத்தில் கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் பொக்கிசம் என்று தமிழ், டிரசரி என்று ஆங்கிலம், கஜானா என்று உருது, பொக்கிசமு என்று தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்திய கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது.

இந்த பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவரான ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் பிடிக்கப்பட்டு சென்னையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர் மனைவியான சின்னோபளம்மா கம்பெனியாரால் பெயரளவுக்கு ஜமீன்தாரிணி ஆக்கப்பட்டார். ஜமீனின் உண்மையான ஆட்சி அதிகாரம் கம்பெனியிடம் மாறியது.

சின்னோபளம்மா கம்பெனியிடம் இருந்து மாதந்தோறும் 30 பொன் வராகன் சம்பளமாக பெற்றார். பிற்பாடு சின்னோபளம்மா இறந்த பிறகு கம்பெனியின் வாரிசில்லா சட்டம் மூலம் பாலசமுத்திரம் ஜமீன் நேரடியாக கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூறினார்.

The post பழநியில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : East India Company ,Palani ,Balasamuthram Zamindarini ,Meena ,Adiwar, Palani Town, Dindigul District ,Naranayamurthy ,Dinakaran ,
× RELATED பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி..!!