தர்மபுரி, ஆக.29: வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களை ஒருங்கிணைத்து ஒரே ஊராட்சியாக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள வத்தல்மலையில் பெரியூர், சின்னாங்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, நாய்க்கனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் வசிக்கும் 5 ஆயிரம் பொதுமக்களின் வாழ்வாதாரம் பின்தங்கியே காணப்படுகிறது. வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, பொட்டலாங்காடு, மண்ணாங்குழி, நாய்க்கனூர், ஒன்றியங்காடு, திருவானைப்பாடி, போன்றிக்காடு, குழியனூர், சஞ்சீவி நகர் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன. இதில் பெரியூர் தர்மபுரி தாலுகாவிலும், பாலசிலம்பு பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிலும், திருவானைப்படி கிராமம் நல்லம்பள்ளி தாலுகாவிலும் உள்ளன. தர்மபுரி நல்லம்பள்ளி, மொரப்பூர் ஒன்றியங்களிலும் பிரிந்து உள்ளன.
எனவே, வத்தல்மலை கிராமங்கள் அனைத்தையும் இணைத்து, ஒரே ஊராட்சியாக மாற்ற வேண்டும். வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் பகுதியாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு 100 சதவீதம் விவசாயம், தொழில் துவங்க மானியம் வழங்கும் வகையில், பல்நோக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். இங்கு மிளகு, காபி போன்ற பயிர்கள் 500 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. காபி போர்டு 100 சதவீத மானியத்தில் காபிக்கான இடுபொருட்கள், விதைகள் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post 13 கிராமங்களை இணைத்து ஒரே ஊராட்சியாக்க வேண்டும் appeared first on Dinakaran.